4 பந்தில் 4 விக்கெட் வீழ்த்தி உலக சாதனை படைத்த இந்திய வம்சாவளி வீராங்கனை- வீடியோ

Update: 2020-08-14 16:36 GMT

ஜெர்மனி மகளிர் கிரிக்கெட் அணிக்கும் ஆஸ்திரியா மகளிர் அணிக்கும் இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் நான்காவது போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்திய வம்சாவளி வீராங்கனையான அனுராதா தோடப்பல்லாபூர் உலக சாதனை படைத்துள்ளார்.

இந்தப் போட்டியில் முதலில் ஆடிய ஜெர்மனி அணி விக்கெட் இழப்பின்றி 20 ஓவர்களில் 198 ரன்கள் விளாசியது. அதிகபட்சமாக கிறிஸ்டினா காஃப் சதம் விளாசினார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரிய அணி தொடக்க முதலே தடுமாறியது. அடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறியது.

ஆட்டத்தின் பதினைந்தாவது ஓவரை ஜெர்மனியின் கேப்டன் அனுராதா தோடப்பல்லாபூர் வீசினார். இந்த ஓவரை சிறப்பாக வீசிய அனுராதா தொடர்ச்சியாக 4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்தி உலக சாதனை படைத்தார். மகளிர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒருவர் 4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்துவது இதுவே முதல் முறையாகும்.

மேலும் இந்தப் போட்டியின் போது அனுராதா தனது சக வீராங்கனை சாரு சடரங்கனியிடம் கன்னடத்தில் பேசியுள்ளார். இவர்கள் இருவரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள். அத்துடன் கர்நாடகாவை சேர்ந்தவர்கள். கன்னட மொழியில் பேசியது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அனுராதா பதிவிட்டுள்ளார். அதில், “களத்தில் இரண்டு கன்னட மொழி பேசுபவர்கள் இருந்தால் வேறு என்ன நடக்கும்” எனப் பதிவிட்டுள்ளார்.

ஆடவர் கிரிக்கெட்டில் இலங்கையின் லசித் மலிங்கா முதல் முதலாக 4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அதன்பிறகு மகளிர் பிரிவில் முதல் முறையாக இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: ‘இந்தியா விற்பனைக்கு அல்ல’- ஹிட்லரை அதிர வைத்த தயான்சந்த் ஆக. 15 ஃபிளாஷ்பேக்