வசிக்கும் வீட்டிற்கு வாடகை செலுத்த கூட முடியாமல் தவிக்கும் டேபிள் டென்னிஸ் வீராங்கனை
கொரோனா வைரஸ் பாதிப்பால் உலக முழுவதும் பல பொருளாதார சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இந்தியாவிலும் பல தொழில்கள் மிகவும் பாதிப்பு அடைந்துள்ளன. இந்தச் சூழலில் விளையாட்டு வீராங்கனை ஒருவர் தனது குடும்பத்தின் பொருளாதார நிலை காரணமாக பயிற்சியை நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. யார் அந்த வீராங்கனை? எந்த விளையாட்டை விட போகிறார்?
டேபிள் டென்னிஸ் விளையாட்டில் சத்யன், சரத் கமல், மோனிகா பாத்ரா போன்றவர்கள் அசத்தி வருகின்றனர். இவர்களை போல ஒரு இளம் வீராங்கனை டேபிள் டென்னிஸ் உலகை அசத்த காத்திருக்கிறார். அவர்தான் ஸ்வஸ்திகா கோஷ். இவர் ஜூனியர் டேபிள் டென்னிஸ் பிரிவில் உலக தரவரிசையில் 5ஆவது இடத்தில் உள்ளார். இவர் தனது குடும்ப சூழல்நிலையில் தனது பயிற்சியை நிறுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இதுகுறித்து ஸ்வஸ்திகா கோஷின் தந்தை சந்தீப் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதில், “ நான் எனது மகளுக்கு பயிற்சியாளராக இருந்து வருகின்றேன். அத்துடன் நான் இங்கு உள்ள டிஏவி பள்ளியில் டேபிள் டென்னிஸ் பயிற்சியாளராக பணி செய்து வருகிறேன். தற்போது கொரோனா ஊரடங்கினால் எனக்கு சரியான வேலை இல்லை. இதனால் எனக்கு ஊதியமும் சரியாக கிடைக்கவில்லை.
இதன்காரணமாக நான் என்னுடைய வைப்பு நிதியான 60ஆயிரம் ரூபாயிலிருந்து வீட்டு செலவுகள் மற்றும் எனது மகளின் பயிற்சி செலவுகளை செய்தேன். தற்போது இந்தத் தொகையும் சற்று குறைந்துள்ளது. இதனால் நாங்கள் இங்கு வசிக்கும் வீட்டிற்கு வாடகை செலுத்த கூட முடியாமல் உள்ளோம்.
அத்துடன் ஒருநாள் என்னுடைய மகளுக்கு தேவையான ஆரோக்கியமான உணவிற்கு குறைந்தது 1200 ரூபாய் செலவாகிறது. இத்தனை செலவுகளையும் என்னால் தற்போது சமாளிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் நாங்கள் மீண்டும் குடும்பத்துடன் எங்களுடைய சொந்த ஊரான மேற்கு வங்கத்திற்கு திரும்பி செல்ல வேண்டியதை தவிர வேறு வழியில்லை.
எங்களது நிலை குறித்து மத்திய விளையாட்டு துறை அமைச்சர் மற்றும் மகாராஷ்டிரா சங்கத்திற்கும் கடிதம் எழுதியுள்ளேன். ஆனால் அவர்களிடமிருந்து இதுவரை எந்தவித பதிலும் வரவில்லை. பெங்கால் செம்பர் என்ற அமைப்பு மட்டும் ஒரு லட்ச ரூபாய் நிதி உதவி செய்தது. அந்த தொகையும் தற்போது குறைய தொடங்கியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
ஸ்வஸ்திகா கோஷ் கடந்த 2018ஆம் ஆண்டு ஜூனியர் பிரிவில் தரவரிசையில் 278ஆம் இடம் பிடித்திருந்தார். தற்போது அவர் தனது கடின முயற்சியால் ஜூனியர் பிரிவில் உலக அளவில் ஐந்தாவது இடத்தில் உள்ளார். வரும் டிசம்பர் மாதம் போர்ச்சுகல் நாட்டில் நடைபெறும் உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் ஸ்வஸ்திகா பதக்கம் வென்றால் அது பெரிய சாதனையாக அமையும். இதனை வெல்ல அவர் தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தது. எனவே மத்திய அரசு உடனடியாக தலையிட்டு ஸ்வஸ்திகாவிற்கு உதவ வேண்டும் என்பதே விளையாட்டு ஆர்வலர்களின் எண்ணமாக உள்ளது.