இந்திய ஆடவர் ஹாக்கி அணியில் கொரோனா பாதிப்பு 6-ஆக உயர்வு

Update: 2020-08-10 11:05 GMT

கொரோனா வைரஸ் பாதிப்பு உலக நாடுகளையும் மிகவும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் வீரர்கள் சிலரும் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்திய ஆடவர் ஹாக்கியின் முன்கள ஆட்டக்காரர் மன்தீப் சிங்கிற்கு தற்போது கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவருடன் சேர்ந்து இந்திய அணியின் கோல் கீப்பர் கிருஷ்ணன் பதக்கிற்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

ஏற்கெனவே கடந்த வெள்ளிக்கிழமை இந்திய கேப்டன் மன்பிரீத் சிங் உள்ளிட்ட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது. தற்போது இந்திய ஆடவர் அணியில் 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து விளையாட்டு ஆணையத்தின் மருத்துவர், “மன்தீப் சிங், மன்பிரீத் சிங், வருண் குமார் உள்ளிட்ட 6 பேரும் தற்போது பெங்களூரு மையத்தில் தனிமை படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மெல்லிய தொற்று அறிகுறிகளே காணப்படுகிறது. இவர்கள் அனைவரும் தற்போது நலமாக உள்ளனர். இவர்களை நாங்கள் தனிமைபடுத்தி கண்காணித்து வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த நான்கு மாதங்களாக பெங்களூரு முகாமில் ஊரடங்கினால் வீரர்கள் சிக்கி தவித்தனர். இவர்கள் அனைவரும் கடந்த ஜூன் 19ஆம் தேதி தங்களின் சொந்த ஊரகளுக்கு சென்றனர். தற்போது ஊரடங்கு விதிகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மீண்டும் வீரர்களுக்கு பயிற்சி முகாம் அளிக்க திட்டமிடப்பட்டது.

இதற்காக இந்திய ஹாக்கி அணியின் வீரர்கள் மீண்டும் பெங்களூரு முகாமிற்கு அழைக்கப்பட்டனர். அப்போது அங்கு வந்துள்ள இந்திய ஹாக்கி வீரர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.