'ஹாக்கி ரைசிங் ஸ்டார் ஆஃப் தி இயர்' விருதை வென்ற விவேக் சாகர் பிரசாத்

Update: 2020-02-10 15:40 GMT

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பான எஃப்.ஐ.ஹெச் 2019ஆம் ஆண்டுக்கான சர்வதேச ஹாக்கி விருதை இன்று முதல் அறிவிக்க தொடங்கியுள்ளது. அதன்படி இன்று 'ரைசிங் ஸ்டார் ஆஃப் தி இயர்' என்ற விருதிற்கான வெற்றியாளரை அறிவித்துள்ளது.

இந்த விருதிற்கு அர்ஜென்டினாவின் கசேலா,ஆஸ்திரேலியாவின் பேலேக் கவர்ஸ், இந்தியாவின் விவேக் சாகர் பிரசாத், ஸ்பெயினின் ஜோனாஸ் ஆகியோர் பரிந்துரைக்கப் பட்டிருந்தனர். இறுதியில் இந்த விருதிற்கு இந்தியாவின் விவேக் சாகர் பிரசாத் தேர்வாகியுள்ளார்.

இந்த அறிவிப்பை இந்திய அணியின் பயிற்சியாளர் கிரஹாம் ரீட் வெளியிட்டார். இது தொடர்பான வீடியோவை எஃப்.ஐ.ஹெச் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில் அவர் விவேக் சாகர் பிரசாதை அழைத்து அந்த அறிவிப்பு பலகையை திறக்கும்படி செய்தார். அந்த சமயத்தில் அங்கு குழுமியிருந்த இந்திய ஹாக்கி அணியின் வீரர்கள் ஆர்வாரம் செய்து விவேக்கிற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

https://twitter.com/FIH_Hockey/status/1226883058118381568

19 வயதான விவேக் சாகர் பிரசாத் தனது 17வயது முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். இவர் தனது 17ஆவது வயது 10 மாதங்கள் 222நாட்களில் இந்தியாவிற்காக முதல் போட்டியை விளையாடினார். குறைந்த வயதில் இந்திய ஹாக்கி அணிக்காக விளையாடிய வீரர்கள் பட்டியலில் இவர் இரண்டாவது இடத்தில் உள்ளார். இவர் 2018ஆம் ஆண்டு இந்திய ஹாக்கி அணி ஆசிய போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற போது அணியில் இருந்தார்.

இவர் இந்தியாவிற்காக தற்போது வரை 56 போட்டிகளில் விளையாடி 35 கோல்களை அடித்துள்ளார். அத்துடன் தற்போது நடைபெற்று வரும் புரோ லீக் ஹாக்கி தொடரிலும் விவேக் சாகர் பிரசாத் சிறப்பாக விளையாடி வருகிறார். இவர் பெல்ஜியத்திற்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணியின் முதல் கோலை அடித்தார். இவர் இந்திய ஹாக்கி அணியில் நடுகள வீரராக களமிறங்கி விளையாடி வருகிறார்.

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விவேக் சாகர் பிரசாத் யூத் கேம்ஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணியை வெள்ளிப் பதக்கம் வெல்ல செய்தார். இவர் ஹாக்கி ஜாம்பவாம் மேஜர் தயான் சந்தின் மகனான அசோக் குமாரிடம் தனது ஹாக்கி பயிற்சியை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.