‘விராட் vs ரோகித்’- இந்திய அணியின் கேப்டன் குறித்து மக்களின் கருத்து என்ன?

Update: 2020-12-03 08:46 GMT

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது. இதற்கு முன்பாக இந்தாண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற நியூசிலாந்து ஒருநாள் தொடரையும் இந்தியா 3-0 என்று இழந்தது. தொடர்ச்சியாக இரண்டு வெளிநாட்டு தொடர்களை இழந்தவுடன் விராட் கோலியின் கேப்டன் பதவி மீது ரசிகர்கள் விமர்சனத்தை வைக்க ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து ‘இன்சைட் ஸ்போர்ட்’ என்ற தளம் ஒரு கருத்து கணிப்பை நடத்தியது. அதில் இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கு யார் கேப்டனாக இருக்க வேண்டும் என்று கேள்வியை முன்வைத்தது. இதற்கு விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் பெயர்களை பதிலாக கொடுத்தது. இந்தக் கருத்து கணிப்பில் கிட்டதட்ட 77% மக்கள் ரோகித் சர்மாவை தேர்வு செய்துள்ளனர்.

விராட் கோலி கேப்டனாக தொடர வேண்டும் என்று வெறும் 22.72% மக்கள் மட்டுமே விருப்பம் தெரிவித்துள்ளனர். ரோகித் சர்மா ஏற்கெனவே கோலி விளையாடாத சில போட்டிகளில் இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட்டுள்ளார்.

அதன்படி ரோகித் சர்மா இதுவரை 10 ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டுள்ளார். அதில் 8 போட்டிகளில் இந்திய அணி வெற்றிப் பெற்றுள்ளது. மேலும் ரோகித் சர்மா 19 டி20 போட்டிகளுக்கு இந்திய கேப்டனாக இருந்துள்ளார். அதில் இந்திய அணி 15 போட்டிகளில் வெற்றிப் பெற்றுள்ளது.

அத்துடன் விராட் கோலியின் தலைமையில் இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகள் சமீபத்தில் தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால் அவரை மாற்ற வேண்டும் என்ற கருத்து எழுந்துள்ளது. எனவே விராட் கோலியை டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும் கேப்டனாக நியமித்து ஒருநாள்,டி20 போட்டிகளுக்கு ரோகித் சர்மாவை கேப்டனாக்க வேண்டும் ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க: ‘கடுமையான சூழலிருந்து வந்து கிரிக்கெட்டில் சாதிக்க நடராஜன் ஒரு முன்னுதாரணம்’ – ஹர்திக் பாண்ட்யா