'நாங்கள் அனைவரும் தனி நபராக தான் பாகிஸ்தான் சென்றுள்ளோம்'- கபடி அணி பயிற்சியாளர்

Update: 2020-02-11 16:37 GMT

7-வது சர்க்கிள் ஸ்டைல் உலகக் கோப்பை கபடி சாம்பியன்ஷிப் போட்டி பாகிஸ்தானில் நேற்று தொடங்கியது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான், கனடா, ஆஸ்திரேலியா, ஈரான், அமெரிக்கா உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன. இந்தப் போட்டி முதல் முறையாக பாகிஸ்தானில் நடைபெறுகிறது. இப்போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் வாகா எல்லைப் பகுதி வழியாக பாகிஸ்தான் சென்றனர்.

அவர்கள் மத்திய அரசிடமிருந்து அனுமதி பெறாமல் சென்றதால் பெரும் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் இந்த அணியின் பயிற்சியாளராக சென்றுள்ள ஹர்பிரீத் சிங் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பான செய்தி 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' தளத்தில் வந்துள்ளது. அதில் பயிற்சியாளர் ஹர்பிரீத் சிங், "இந்தத் தொடரில் பங்கேற்பதற்கு தனியாக ஒருவொரு வீரருக்கும் அழைப்பிதழ் வந்தது. நாங்கள் ஒரு போட்டி தொடரில் பங்கேற்பதற்காக எப்படி மற்ற இடங்களுக்கு செல்லுவோமோ அதேபோன்று தான் இங்கியேயும் வந்துள்ளோம்.

நாங்கள் அனைவரும் தனி நபராக இங்கு வந்துள்ளோம். ஆகவே எங்களுக்கு இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் அனுமதியோ மத்திய அமைச்சகத்தின் அனுமதியோ தேவையில்லை. மேலும் அனைவரும் வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் முறையாக விசா பெற்று தான் பாகிஸ்தான் வந்திருக்கிறோம். எங்களை தடுக்க நினைத்திருந்தால் விசா கொடுக்கும் போதே தடுத்திருக்கிலாம்.

அத்துடன் வாகா எல்லையிலுள்ள அதிகாரிகளிடம் நாங்கள் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க போகிறோம் என்று கூறிவிட்டு தான் வந்தோம்" எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக இந்த அணி விளையாட்டு அமைச்சகத்திடம் கூறாமால் சென்று பெரும் சர்ச்சையை கிளப்பியது.

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ, "இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் செல்வதற்கு ஒரு விளையாட்டு வீரருக்கு கூட அனுமதி வழங்கப்படவில்லை" எனத் தெரிவித்திருந்தார்.

இது குறித்து இந்திய அமெச்சூர் கபடி சம்மேளன நிர்வாகி எஸ்.பி.கார்க், “‘பாகிஸ்தானுக்கு கபடி அணி சென்றது குறித்து எங்களிடம் எந்த தகவலும் இல்லை. நாங்கள் எந்த கபடி அணிக்கும் அனுமதி கொடுக்கவில்லை. இது போன்ற நடவடிக்கைகளை நாங்கள் ஒரு போதும்ஆதரிக்க மாட்டோம். இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது”எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.