ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதிப் போட்டிகள்: இந்திய வீரர் அமித் பங்கால் தரவரிசையில் முதலிடம்

Update: 2020-02-13 10:30 GMT

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான குத்துச்சண்டை தகுதிப் போட்டி அடுத்த மாதம் ஜோர்டன் தலைநகர் அம்மானில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிகள் முதலில் சீனாவில் நடைபெறுவதாக இருந்தது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் இந்தப் போட்டி ஜோர்டனுக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் இந்தப் போட்டியில் பங்கேற்கும் குத்துச்சண்டை வீரர்களின் தரவரிசைப் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஆடவர் 52 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் அமித் பங்கால் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளார். 10ஆண்டுகளுக்கு பிறகு இந்திய வீரர் ஒருவர் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.

இதற்கு முன்பு 2009ஆம் ஆண்டு 75 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் விஜேந்தர் சிங் தரவரிசையில் முதலிடம் பிடித்தார். அப்போது அவர் 2008ஆம் ஆண்டு ஒலிம்பிக் மற்றும் 2009ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் ஆகியவற்றில் வெண்கல பதக்கம் வென்று இருந்தார்.

அதன்பின்னர் தற்போது மீண்டும் அமித் பங்கால் இந்தப் பெருமையை பெற்றுள்ளார். 2017ஆம் ஆண்டு முதல் அமித் பங்கால் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக 2018ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் மற்றும் ஆசிய போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றார். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இவர் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். மேலும் ஆசிய குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இவர் தங்கப் பதக்கம் வென்றார்.

குத்துச் சண்டை தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ள அமித் பிடிஐ நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். இதன்மூலம் எனக்கு ஒலிம்பிக் தகுதிப் போட்டிகளில் சீடிங் கிடைக்கும். அத்துடன் நம்பர் 1 வீரராக இருக்கும் போது எனக்கு நம்பிக்கை அதிகமாகிறது. இந்த முதல் தகுதிப் போட்டிகளிலேயே நான் ஒலிம்பிக் போட்டிகான தகுதியை பெற முயற்சிப்பேன்" எனத் தெரிவித்துள்ளார்.

மகளிர் தரவரிசையை பொறுத்தவரை 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம் 51 கிலோ எடைப் பிரிவில் 5ஆவது இடத்தை பிடித்துள்ளார். மகளிர் பிரிவில் அதிகபட்சமாக 69 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் லோவ்லினா பார்கோன் தரவரிசையில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

இந்த தரவரிசை புள்ளிகள் கடந்த இரண்டு ஆண்டுகள் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் மற்றும் 2019ஆம் ஆண்டு ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் ஆகியவற்றை வைத்து தரப்படும். ஆசிய ஒலிம்பிக் தகுதிப் போட்டிகள் ஜோர்டனில் நடைபெற உள்ளதை போல பிற கண்டங்களின் ஒலிம்பிக் தகுதிப் போட்டிகளும் நடைபெற உள்ளன. இவை அனைத்தும் முடிந்த பிறகு பாரிஸில் இறுதி கட்ட தகுதிப் போட்டிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.