ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2020: #INDvSL ஆட்டத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள்

Update: 2020-02-29 19:32 GMT

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 2020 ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரின் அரையிறுதிக்கு இந்திய அணி தகுதிபெற்றுள்ள நிலையில், தனது கடைசி லீக் போட்டியில் இலங்கை அணி எதிர்கொண்டது.

டாஸை வென்று முதலில் பேட் செய்த இலங்கை, இந்தியாவின் அபார பந்துவீச்சினால் 113 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இந்திய பந்துவீச்சாளர்கள் அனைவரும் விக்கெட்டினை வீழ்த்தியது சிறப்பம்சமாகும். குறிப்பாக ராதா யாதவ் இந்த ஆட்டத்திலும் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் தொடர்ந்து 23 டி20 போட்டிகளில் ஒரு விக்கெட்டினையாவது வீழ்த்தியவர் என்ற மேகன் ஷயுட்டின் சாதனையை சமன் செய்துள்ளார்.

மற்ற ஆட்டங்களைக் காட்டிலும் இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் ஃபீல்டிங் சிறப்பாக இருந்தது.

இந்த உலகக்கோப்பையில் முதல் முறையாக சேசிங் செய்தது இந்தியா. ஆனால் எந்த மாற்றமும் இல்லாமல் பேட்டிங்கில் வழக்கம்போல வெளுத்து வாங்கினார் ஷஃபாலி வர்மா. அதிரடியாக ரன்களை குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். பேட்டிங் வரிசையில் முன்னதாக கேப்டன் ஹர்மன்பீரித் சில பவுண்டரிகள் அடித்து பின்னர் அவுட்டானர். அதன் பின்னர் வந்த ஜெமிமா மற்றும் தீப்தி விக்கெட்டினை இழக்காமல் பொருப்பாக ஆடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர்.

அரையிறுதிக்கு முன்னதாக இந்த சுலபமான வெற்றி இந்திய அணிக்கு பெரும் தன்னம்பிக்கையை கொடுக்கும். இதேபோன்ற பெர்ஃபாமன்ஸினை அடுத்த ஆட்டத்திலும் வெளிப்படுத்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறுவார்கள் என்பதே அனைத்து இந்திய ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு.