வீடியோ: ‘எனக்கு ஆக்ரோஷமாக இருக்க தெரியாது’- யார்க்கர் நாயகன் நடராஜன்!

Update: 2020-12-09 03:59 GMT

ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் இடையேயான டி20 தொடர் நேற்று முடிந்தது. இந்தத் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. இத்தொடரை இந்திய அணி வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தவர் தமிழக வீரர் நடராஜன். இவர் இத்தொடரில் 3 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

இந்நிலையில் நேற்றைய கடைசிப் போட்டிக்கு பிறகு தொடர் நாயகன் விருது ஹர்திக் பாண்ட்யாவிற்கு வழங்கப்பட்டது. இந்த விருதை ஹர்திக் பாண்ட்யா நடராஜனிடம் அளித்தார். அவரை பொருத்தவரை பந்துவீச கடினமான சூழல் இருந்தப் போது அதில் சிறப்பாக பந்துவீசிய நடராஜன் தான் நாயகன் என்று ஹர்திக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து சோனி சிக்ஸ் தொலைக்காட்சிக்கு நடராஜன் ஒரு பேட்டியை அளித்தார். அதில், “நான் ஒரு நெட் பவுலராக ஆஸ்திரேலியா வந்தேன். வருணுக்கு ஏற்பட்ட காயத்தின் மூலம் அணியில் இடம்பெற்றேன். நான் ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்துவீசி வந்தேன். அதே ஃபார்மை ஆஸ்திரேலியாவிலும் தொடர நினைத்தேன்.

என்னுடைய முக்கிய பந்துகளான யார்க்கர் மற்றும் கட்டர் ஆகியவற்றை சிறப்பாக இங்கும் பயன்படுத்தினேன். முதல் தொடரில் நான் சிறப்பாக விளையாடியது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. என் மகிழ்ச்சியை எவ்வாறு வெளிப்படுத்துவது என்பது தெரியாத அளவிற்கு உள்ளேன். மேலும் நான் விக்கெட் எடுத்தாலே ரன்கள் அதிகமாக கொடுத்தாலே ஒரே மாதிரியாக தான் இருப்பேன்.

இது நான் பல நாட்களாக பழகிய ஒன்று. என்னிடம் இதுகுறித்து பலர் கேட்டுள்ளனர். நான் எப்போதும் இருப்பது போல் தான் இங்கு இருந்தேன்” எனக் கூறியுள்ளார். ஆஸ்திரேலிய தொடரின் மூலம் இந்திய அணியின் முக்கிய நட்சத்திரமாக நடராஜன் உருவெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: ‘சின்னப்பம்பட்டி சிங்கம் நடராஜன்’- ட்விட்டரில் பாராட்டிய ரசிகர்கள்