பேட்மிண்டன் ஆசியக் குழு சாம்பியன்ஷிப்: தாய்லாந்தை போராடி வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு தகுதி

Update: 2020-02-14 15:07 GMT

ஆசியக் குழு பேட்மிண்டன் போட்டிகள் பிலிபைன்ஸில் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டிகளிலிருந்து இந்திய மகளிர் அணி விலகியது. எனவே பலம் வாய்ந்த ஆடவர் அணி மட்டுமே இத்தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்திய அணி கஜகிஸ்தான் அணியை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தியது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி மலேசியாவிடம் 1-4 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. எனினும் பி பிரிவில் இரண்டாவது அணியாக இந்திய அணி காலிறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் இந்திய அணி தாய்லாந்து அணியை எதிர்கொண்டது. முதல் ஒற்றையர் போட்டியில் சாய் பிரணீத் வாங்சோரனை எதிர்த்து விளையாடினார். அதில் வாங்சோரன் 21-14,14-21,21-12 என்ற கணக்கில் சாய் பிரணீத்தை வீழ்த்தினார்.

அதன்பின்னர் நடைபெற்ற இரண்டாவது ஒற்றையர் போட்டியில் ஶ்ரீகாந்த் விட்டிதசரனை எதிர்கொண்டார். இதில் விட்டிதசரன் 22-20,21-14 என்ற கணக்கில் வென்றார். இதனால் தாய்லாந்து அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

எனினும் இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரட்டையர் போட்டியில் இந்தியாவின் எம்.அர்ஜூன்-துரூவ் கபிலா இணை கேட்ரன்- விரியங்குரா இணையை 21-18,22-20 என்ற கணக்கில் வீழ்த்தியது. மேலும் மூன்றாவது ஒற்றையர் போட்டியில் லக்‌ஷ்யா சென் 21-19,21-18 என்ற கணக்கில் உலக தரவரிசையில் 45ஆவது இடத்திலுள்ள அவிங்சானோனை வீழ்த்தினார். இதன்மூலம் இந்திய அணி 2-2 என சமன் செய்தது.

போட்டியை யார் வெல்வார் என்பதை தீர்மானிக்கும் கடைசி இரட்டையர் போட்டியில் சிராக் செட்டியுடன் ஶ்ரீகாந்த் இணைந்து விளையாடினார். இந்த இணை ஜோங்ஜிட்-புவாங்காபேட் ஜோடியை எதிர்கொண்டது. பரப்பரப்பாக நடைபெற்ற இப்போட்டியை சிராக்-ஶ்ரீகாந்த் இணை 21-15,16-21,21-15 என்ற கணக்கில் வென்று அசத்தியது. இறுதியில் 3-2 என்ற கணக்கில் இந்திய அணி தாய்லாந்து அணியை தோற்கடித்து அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் பலம் வாயந்த இந்தோனேஷியா அணியை எதிர்த்து விளையாட உள்ளது. இந்தோனேஷியா அணியில் ஆசிய சாம்பியன் ஜோனத்தன் கிறிஸ்டி மற்றும் இரட்டையர் பிரிவில் முதல்நிலை ஜோடியான கிடியான்-சுகாமுல்ஜோ இணை உள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே இந்திய அணிக்கு இந்தப் போட்டி பெரிய சவாலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.