மகளிர் டி-20 உலகக் கோப்பை #INDvSL: 14.4 ஓவர்களில் வெற்றி... அரை இறுதிக்கு இந்திய அணி தயார்

Update: 2020-02-29 06:53 GMT

ஐசிசி மகளிர் டி-20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மூன்று லீக் போட்டிகளை வென்றுள்ள இந்திய அணி, முதல் அணியாக அரை இறுதிக்கு முன்னேறிவிட்டது. இன்று இலங்கை அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் விளையாடுகிறது.

மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி, பேட்டிங் தேர்வு செய்தது. போட்டியின் மூன்றாவது ஓவரிலேயே முதல் விக்கெட்டை இழந்த இலங்கை அணி திணற ஆரம்பித்தது. அடுத்தடுத்த ஓவர்களில் விக்கெட்டை இழந்த இலங்கை அணி தடுமாறியது. அதிகபட்சமாக கேப்டன் சமரி அட்டப்பட்டு 33 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் எதிரணியை ரன் எடுக்கவிடாமல் திணறடித்தனர். இந்திய அணியின் ராதா யாதவ் 4 விக்கெட்டுகள் எடுத்தார். ராஜேஷ்வரி 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். தீப்தி ஷர்மா, ஷிகா பாண்டே, பூனம் யாதவ் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு இலங்கை அணி 113 ரன்கள் எடுத்தது.

எளிதான இலக்கை சேஸ் செய்ய களமிறங்கியது இந்திய அணி. வழக்கம்போல ஸ்மிரிதி மந்தானா, ஷாபாலி வெர்மா இணை ஓப்பனிங் கொடுத்தது. 34 ரனக்ளுக்கு இந்த இணை களத்தில் நின்றது. ஸ்மிரிதி மந்தானா 17 ரன்கள் எடுத்திருந்தபோது பிரபூதனியின் ஓவரில் கேட்ச் கொடுத்து அவுட்டானார்

ஸ்மிரிதியை தொடர்ந்து கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பேட்டிங் இறங்கினார்.விக்கெட் சரிந்தாலும், மறுபுறம் ஷாபாலியின் அதிரடி தொடர்ந்தது. சிங்கிள்ஸ் எடுத்து கொண்டே, முடிந்த நேரத்தில் பவுண்டரிகளையும், 1 சிக்சரும் அடித்தார்.

இந்த போட்டியிலும் ஹர்மன்பிரீத்தின் கவுர் ஏமாற்றம் தந்தார். தவறான ஷாட் விளையாடியதால் 15 ரன்களுக்கு கேட்ச் கொடுத்து அவுட்டானார். கேப்டன் பெவிலியன் திரும்பியதும் ஜெமிமா பேட்டிங் களமிறங்கினார்.

ஷாபாலியும், மெமிமாவும் இலக்கை எட்டுவர் என்று எதிர்பார்த்தபோது விக்கெட் சரிந்தது. 46 ரன்கள் எடுத்து களத்தில் இருந்த ஷாபாலி ரன்-அவுட்டானார். அடுத்து தீப்தி ஷர்மா பேட்டிங் இறங்கினார். ஜெமிமாவும், தீப்தி ஷர்மாவும் நிதானமாக விளையாட 14.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டியது இந்திய அணி. 14.4 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்த இந்திய அணி போட்டியை வென்றது.

2020 ஐசிசி மகளிர் டி-20 உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் 4 போட்டிகளையும் வென்றது இந்திய அணி. தொடர் வெற்றிகளோடு அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது.