ஐஎஸ்எல் தொடரில் ஜொலிக்க காத்திருக்கும் ஐ லீக் நட்சத்திரங்கள்

Update: 2020-11-19 03:10 GMT

விளையாட்டு ரசிகர்களுக்கு தொடர் கொண்டாட்டமாக நவம்பர் 20ஆம் தேதி துவங்கவிருக்கிறது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஏழாவது சீசன். பழமைவாய்ந்த ஈஸ்ட் பெங்கால் அணி இந்த முறை ஐ.எஸ்.எல்லில் களம் காணுவதால் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. மொத்தம் 11 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் வழக்கம் போல் ஐ லீக் தொடரிலிருந்து பல சிறந்த வீரர்கள் இணைந்துள்ளனர். அவர்களில் முக்கியமான ஐந்து வீரர்களைப் பற்றி காண்போம்:

ஃபிரான் கோன்சாலெஸ் - பெங்களூரு எப் சி அணிக்காக ஆடவிருக்கும் இவர் கடந்த சீசனில் பட்டம் வென்ற மோகன் பகான் அணிக்காக விளையாடினார். நடுகளம் மற்றும் தடுப்பு ஆட்டம் என இரண்டு பகுதியிலும் சிறப்பாக ஆடக் கூடிய இவர் கடந்த சீசனில் 10 கோல்கள் அடித்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.

லால்ராம்சுலோவா - ஈஸ்ட் பெங்கால் அணிக்காக ஆடவிருக்கும் இவர் ஐ லீக் தொடரில் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர்களில் ஒருவர். ஐஸாவல் எப் சி அணிக்காக ஆடத்துவங்கிய இவர் அங்கு ஐ லீக் பட்டம் வென்றார். அதன் பிறகு ஈஸ்ட் பெங்கால் அணியில் இணைந்து தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்தார். கடந்த சீசனில் மோகன் பகான் அணியில் இணைந்து ஐ லீக் பட்டம் வென்ற பின் தற்போது மீண்டும் ஈஸ்ட் பெங்கால் அணியில் விளையாட இருக்கிறார்.

சங்கர் ராய் - கடந்த ஐ லீக் சீசனில் பட்டம் வென்ற மோகன் பகான் அணியிலிருந்து மற்றொரு வீரர். கடந்த மூன்று ஆண்டுகளாக அந்த அணிக்காக ஆடி வரும் இவர் ஒரு சிறந்த கோல் கீப்பர் என்பதற்கு அவரின் சாதனைகளே ஒரு எடுத்துக்காட்டாகும். இந்த ஐஎஸ்எல் தொடரில் ஈஸ்ட் பெங்கால் அணிக்காக விளையாடயுள்ளார்.

ரோச்சர்ஷெலா - ஐஸாவல் எப் சி அணி உருவாக்கிய மற்றுமொரு திறமையான வீரர். இந்த சீசனில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிக்காக ஆடவிருக்கும் இவர் கடந்த ஐ லீக் தொடரில் அதிக கோல்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

அஜித் குமார்

அஜித் குமார் - தமிழ் நாட்டில் மிகவும் பிரபலமான ஒருவரின் பெயரை பகிர்ந்துள்ள தடுப்பாட்டக்காரரான இவர் சென்னை சிட்டி எப்சி அணி ஐ லீக் பட்டம் வெல்வதற்கு மிகவும் உறுதுணையாக இருந்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த இவர் இந்த ஐஎஸ்எல் தொடரில் பெங்களூரு எப் சி அணிக்காக ஆடவிருக்கிறார்.

மேலும் படிக்க: காளி பூஜையில் பங்கேற்றதற்காக மன்னிப்பு கேட்ட ஷகிப் அல் ஹசன்