ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை: இறுதிப்போட்டியின் முக்கிய 5 வீராங்கனைகள்

Update: 2020-03-07 10:52 GMT

பிப்ரவரி 21 முதல் ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக நடந்து வரும் டி20 மகளிர் உலகக்கோப்பை போட்டி இறுதிக்கட்டத்தினை எட்டியுள்ளது. மெல்போர்னில் நாளை நடக்கும் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பினும் போட்டியை நடத்தும் நாடான ஆஸ்திரேலியாவும், முதல் முறையாக டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள இந்தியாவும் மோதுகின்றன. இந்த இரு அணிகளிலும் திறமையான வீராங்கனைகள் பலர் இருந்தாலும் நாளைய ஆட்டத்தில் முக்கிய பங்காற்றாப்போகும் வீராங்கனைகள் யார் யார் என்று காண்போம்:

ஷஃபாலி வர்மா:

இந்த உலகக்கோப்பை தொடரில் அனைவராலும் உச்சரிக்கப்படும் ஒரு பெயர் ஷஃபாலி வர்மா. 16 வயதே ஆன இவர் தனது அதிரடி ஆட்டத்தினால் அனைவரையும் ஆச்சர்யபட வைத்துள்ளார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி ஒவ்வொரு ஆட்டத்திலும் அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்துள்ளார். இதுவரை நான்கு ஆட்டங்களிலும் 161 ரன்களை குவித்துள்ளார், இந்த அதிரடி ஆட்டத்திற்கான பலனாக உலக மகளிர் டி20 பேட்டிங் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். முதன்முதலாக ஒரு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் விளையாட இருந்தாலும் தனது அதிரடி ஆட்டத்தினை மாற்றமாட்டர் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

அலிஸா ஹீலி:

ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் முதுகெலும்பு. இறுதிப்போட்டி உட்பட பல உலகக்கோப்பையில் விளையாடியுள்ள மிகுந்த அனுபவசாலி. ஷஃபாலியை போலவே அதிரடியாக ரன்களை குவிக்கும் தொடக்க ஆட்டக்காரர். பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்துவது மட்டுமில்லாமல் உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவரும் ஆவார். ஆஸ்திரேலிய அணி கோப்பையை வெல்ல இவரது இரட்டிப்பு பங்களிப்பு மிகவும் அவசியம். காயம் காரணமாக எலைஸ் பெர்ரி விலகியதால் இவருக்கு கூடுதல் பொருப்பு என்றாலும், நாளைய ஆட்டத்தில் இவரை உற்சாகப்படுத்த இவரது கணவரும் உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவருமான மிட்ச்செல் ஸ்டார்க் வருவது இவருக்கு நிச்சயம் புதிய உத்வேகத்தை அளிக்கும்.

பூனம் யாதவ்:

சந்தேகமில்லாமல் இந்த உலகக்கோப்பையில் அனைவரும் எதிர்கொள்ள சிரமப்பட்ட பந்துவீச்சாளர் பூனம் யாதவ் தான். ஐந்து அடிக்கும் குறைவான உயரமாக இருந்தாலும் தனது மாயஜால சுழற்பந்து வீச்சினால் அனைவரையும் திணறடித்துள்ளார். இதுவரை 9 விக்கெட்களை வீழ்த்தி இந்த தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்திய பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சிறப்பாக பந்து வீசியது இவருக்கு மேலும் நம்பிக்கையை அளிக்கும். இவரின் ஃபார்ம் இந்தியா உலகக்கோப்பையை வெல்ல மிகவும் முக்கியம்.

மேகன் ஸூட்:

ஆஸ்திரேலிய அணியின் பெளலிங் தலைவி. வேகபந்து வீச்சாளரான இவர் இதுவரை இந்த உலகக்கோப்பையில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. முதல் போட்டியில் ஷஃபாலி வர்மா இவருக்கு எதிராக அடித்த சிக்ஸர்கள் தன்னை இன்னும் பாதித்து வருவதாக பேட்டியளித்துள்ளார். இதன்மூலம் நாளைய போட்டியில் அதற்கு நிச்சயம் பதிலடி கொடுக்கும் விதமாக பந்து வீசுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. உலகக்கோப்பையை தக்கவைத்து கொள்ள வேண்டிய கட்டாயமும் கூடுதல் உத்வேகத்தினை கொடுக்கும்.

தீப்தி ஷர்மா:

இந்திய அணியின் முதன்மை ஆல்ரவுண்டர். கடினமான பவர்ப்ளேயில் பந்து வீசுவது, முக்கியமான மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்வது போன்ற பெரிய பொருப்புகளை சுமப்பவர். இதுவரை சிறப்பாகவே செயல்பட்டு வந்துள்ள இவர், இறுதி ஆட்டத்தில் மேலும் சிறப்பாக ஆட வேண்டியது இந்திய அணிக்கு மிகவும் அவசியம். 50 ஓவர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடிய அனுபவத்தை இங்கு பயன்படுத்தி கொண்டு இந்த போட்டியில் பொருப்பாக ஆட வேண்டும்.

பலம் வாய்ந்த இரு அணிகள் மோதுவதால் இந்த இறுதிப்போட்டியில் பரபரப்புக்கு எந்த பஞ்சமும் இருக்காது. இந்திய ரசிகர்களுக்கோ 50 ஓவர் உலகக்கோப்பையை தவறவிட்டது போல, இந்த முறை நடக்கக்கூடாது என்ற எதிர்பார்ப்பு. ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கோ சொந்த மண்ணில் வென்று உலகக்கோப்பையை தக்கவைத்து கொள்ள வெல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு. ஆட்டத்தின் முடிவின்பொழுது எந்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம்.