ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இந்திய அணிக்கு கிடைத்த பாடங்கள்

Update: 2020-03-08 14:39 GMT

கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக நடந்து வந்த மகளிர் டி20 உலகக்கோப்பை இன்றுடன் முடிவடைந்தது. இதில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, போட்டி முழுவதும் சிறப்பாக விளையாடிய இந்திய அணியினை துவம்சம் செய்து கோப்பையை தக்கவைத்து கொண்டது. இது அவர்கள் வெல்லும் ஐந்தாவது கோப்பை என்பது குறிப்படதக்கது. இதன்மூலம் லீகினில் இந்தியாவிடம் தோற்றதற்கு பதிலடி கொடுத்தனர். இந்த உலகக்கோப்பை முழுவதும் சிறப்பாக விளையாடி வந்தாலும் மிகவும் முக்கியமான ஆட்டத்தில் சோபிக்க தவறிவிட்டது இந்திய அணி. இருப்பினும் இதன் மூலம் அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம். அவற்றில் சிலவற்றை காண்போம்:

இந்திய அணி முதலில் தரம் உயர்த்த வேண்டியது தங்களது ஃபீல்டிங்கினை தான். இன்று சிறப்பாக ஃபீல்டிங் செய்திருந்தால் ஆட்டத்தின் போக்கே மாறியிருக்கும். முதல் ஓவரிலே அலிஸா கொடுத்த எளிதான வாய்ப்பினை தவறவிட்டார் ஷஃபாலி. அதன் பின்னர் தன் பெளலிங்கில் மூனி கொடுத்த வாய்ப்பினை தவறவிட்டார் ராஜேஸ்வரி. அவர்கள் இருவரும் அதன்பின்னர் ரன்களை குவித்தது அனைவரும் அறிந்ததே.

அடுத்த முக்கியமாக, இந்த தொடர் முழுவதும் இந்தியா சந்தித்த பிரச்சினையான மிடில் ஆர்டர் பேட்டிங். இன்று அது முற்றிலுமாக சொதப்பியது. கேப்டன் ஹர்மன்பீரித் மற்றும் முன்னனி மட்டையாளர்களான ஸ்மிருதி, ஜெமிமா ஆகியோர் சிறப்பாக பெர்ஃபாம் செய்யாதது இந்திய அணிக்கு பெரும் பின்னைடவாகும். அதிலும் இன்றைய போட்டியில் அனைவரும் பொருப்பிலாத ஷாட்கள் ஆடி அவுட் ஆனது மிகவும் வருத்தமளிக்கிறது.

அனைத்திற்கும் மேலாக ப்ரஷர் தருணத்தை கையாள்வது குறித்து அணிக்கு நிச்சயம் பயிற்சி தேவை. இதில் நல்ல விஷயமாக இந்திய அணியில் விளையாடிய வீராங்கனைகளில் பலர் மிகவும் இளவயது ஆவார்கள். இவர்கள் அனைவரும் நிச்சயமாக பல வருடங்களுக்கு இந்திய அணியில் விளையாட போகிறார்கள். முறையான பயிற்சி மூலம் நிச்சயம் அவர்கள் மெருகேறி இந்திய அணிக்காக பல கோப்பைகளை வெல்வார்கள்.