இந்தியா, இங்கிலாந்து மோதும் டி20 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டி - 5 முக்கிய வீராங்கனைகள்

Update: 2020-03-04 14:17 GMT

பிப்ரவரி 21 முதல் ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி20 மகளிர் உலகக்கோப்பை போட்டி இறுதிக்கட்டத்தினை எட்டியுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, சவுத் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன. நாளை நடக்கும் முதல் அரையிறுதியில் இந்திய, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகளிலும் முக்கிய வீரர்களை காண்போம்:

ஷஃபாலி வர்மா:

இந்த உலகக்கோப்பை தொடரில் அனைவராலும் உச்சரிக்கப்படும் ஒரு பெயர் ஷஃபாலி வர்மா. 16 வயதே ஆன இவர் தனது அதிரடி ஆட்டத்தினால் அனைவரையும் ஆச்சர்யபட வைத்துள்ளார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி ஒவ்வொரு ஆட்டத்திலும் அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்துள்ளார். இதுவரை நான்கு ஆட்டங்களிலும் 161 ரன்களை குவித்துள்ளார், இந்த அதிரடி ஆட்டத்திற்கான பலனாக உலக மகளிர் டி20 பேட்டிங் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.

நடாலீ ஷைவர்:

இங்கிலாந்து அணியின் பேட்டிங் முதுகெலும்பு. கிரிக்கெட்டின் முக்கிய பொஷிசனான ஒன்-டவுனில் ஆடிவரும் இவர் ஒவ்வொரு ஆட்டத்திலும் பொருப்பாக விளையாடி வந்துள்ளார். இதுவரை மூன்று ஃபிஃப்டிகளுடன் இதுவரை 202 ரன்கள் குவித்து இந்த தொடரில் அதிக ரன்கள் அடித்துள்ளார். ஆல்ரவுண்டரான இவர், அணிக்கு தேவையான போது சிறப்பாக பெளலிங் செய்வது கூடுதல் சிறப்பு.

பூனம் யாதவ்:

சந்தேகமில்லாமல் இந்த உலகக்கோப்பையில் அனைவரும் எதிர்கொள்ள சிரமப்பட்ட பந்துவீச்சாளர் பூனம் யாதவ் தான். ஐந்து அடிக்கும் குறைவான உயரமாக இருந்தாலும் தனது மாயஜால சுழற்பந்து வீச்சினால் அனைவரையும் திணறடித்துள்ளார். இதுவரை 9 விக்கெட்களை வீழ்த்தி இந்த தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்திய பட்டியலில் முதலிடத்தில் உள்ள இவரின் ஃபார்ம் இந்தியா பட்டம் வெல்ல மிகவும் முக்கியம்.

சோபி எக்கெள்ஸ்டோன்:

மகளிர் டி20 பெளலிங் தரவரிசையில் முதலிடத்தில் இருப்பவர். தேவையான போது விக்கெட் வீழ்த்துவது மட்டுமில்லாமல் குறைந்த ரன்களை விட்டுக்கொடுப்பது இவரது சிறப்பாகும். இடது கை பந்துவீச்சாளரான இவர் இதுவரை இந்த உலகக்கோப்பையில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தீப்தி ஷர்மா:

இந்திய அணியின் முதன்மை ஆல்ரவுண்டர். கடினமான பவர்ப்ளேயில் பந்து வீசுவது, முக்கியமான மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்வது போன்ற பெரிய பொருப்புகளை சுமப்பவர். இதுவரை சிறப்பாகவே செயல்பட்டு வந்துள்ள இவர், அடுத்த ஆட்டத்தில் மேலும் சிறப்பாக ஆடினால் இந்திய அணிக்கு கூடுதல் பலம்.

பலம் வாய்ந்த இரு அணிகள் மோதுவதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. இந்திய ரசிகர்களுக்கோ கடந்த உலகக்கோப்பையில் அரையிறுதியில் இங்கிலாந்து அணியிடம் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு. இங்கிலாந்து ரசிகர்களுக்கோ கடந்த முறை தவறவிட்ட உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு. எது நடக்கும் என பொறுத்திருந்து பார்ப்போம்.