ஐசிசி மகளிர் டி-20 உலகக்கோப்பை: இந்தியா vs ஆஸி. கவனிக்கப்பட வேண்டிய 5 வீராங்கனைகள்

Update: 2020-02-20 18:02 GMT

ஐசிசி டி20 மகளிர் உலகக்கோப்பை ஏழாவது முறையாக ஆஸ்திரேலியாவில் நாளை முதல் நடக்கவிருக்கிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது கோப்பையை வெல்லும் என கருதப்படும் அணிகளில் ஒன்றான இந்தியா. இரு அணிகளிலும் இருந்து சில முக்கிய வீராங்கனைகளை காணுவோம்.

1. ஷஃபாலி வர்மா

15 வயதே ஆன இந்தியாவின் புதிய நம்பிக்கை நட்சத்திரம். சச்சின் டெண்டுல்கரின் 30 ஆண்டு கால சாதணையை உடைத்து குறைந்த வயதில் இந்தியாவிற்காக அரைசதம் அடித்த பெருமையைப் பெற்றார். அனைத்து பந்துவீச்சாளர்களையும் அடித்து துவம்சம் செய்யும் அதிரடியான தொடக்க ஆட்டக்காரர். சமீபத்தில் நடந்து முடிந்த வெஸ்ட் இண்டிஸ் தொடரில் சிறப்பாக விளையாடி தொடர் நாயகி விருதினை வென்றார். இவரின் அதிரடி தொடக்கம் இந்திய அணிக்கு பெரும் பலமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

2. அலீஸா ஹீலி

கடந்த உலகக்கோப்பை தொடரின் நாயகி. 2019ல் தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகின் சிறந்த டி20 வீராங்கனை விருது. அக்டோபரில் ஶ்ரீலங்காவிற்கு எதிரான போட்டியில் 148 ரன்களை குவித்து பெண்கள் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த சாதனையை செய்தவர்.அணியின் தொடக்க ஆட்டக்காரர், விக்கெட் கீப்பர் என முக்கிய பொருப்புகளை கொண்டிருப்பவர். ஆஸ்திரேலிய அணி கோப்பையை தக்கவைத்து கொள்ள இவரின் பெரும் பங்களிப்பு மிகவும் அவசியம்.

3. ஸ்மிருதி மந்தானா

23 வயதே ஆகி இருந்தாலும் உலகின் தலைசிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவர். இடதுகை மட்டையாளரான இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான முத்தரப்பு தொடரில் சிறப்பாக விளையாடிய இவர் தொடர்ந்து உலகக்கோப்பையிலும் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதே அனைத்து இந்திய ரசிகர்களின் விருப்பமாக இருக்கும்.

4. எலீஸ் பெர்ரி

உலகின் தலைசிறந்த வீரராக கொண்டாடபடுபவர். இளம் வீரர்களுக்கு ஒரு ரோல் மாடல். பல ஆண்டுகளாக கிரிக்கெட் ஆடிவந்தாலும் தொடர்ந்து சிறப்பாக விளையாடி அசத்தி வருகிறார். சொந்த மண்ணில் நடக்கும் உலகக்கோப்பையை வெல்ல கடுமையாக போராடுவார் என அணைவரும் எண்ணுகிறார்கள்.

5. தீப்தி ஷர்மா

இந்திய அணியின் முதன்மையான ஆல்ரவுண்டர். 22 வயதே ஆகி இருந்தாலும் அணியில் உள்ள அனுபவம் வாய்ந்த வீரர்களில் இவரும் ஒருவர். அணியில் உள்ள ஒரே ஆஃப் ஸ்பின்னர் என்பதால் இந்த முறை பந்துவீச்சில் கூடுதல் பொருப்பும் உள்ளது. அதற்கேற்றார் போல் சமீபத்தில் நடந்து முடிந்த தொடரில் குறைந்த ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். ஆனால் பேட்டிங்கில் தொடர்ந்து சோபிக்காமல் இருந்து வருகிறார். அதிலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என அணி நிர்வாகம் நிச்சயம் எதிர்ப்பார்க்கும்.

உலகக்கோப்பையினை வெற்றியுடன் தொடங்க இரு பலம் வாய்ந்த அணிகளும் போராடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.