டி20 உலகக் கோப்பையில் இந்தியா-ஆஸி. கடந்த கால போட்டிகளின் வரலாறு

Update: 2020-02-21 00:27 GMT

மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டிகள் இன்று மதியம் 1.30 மணிக்கு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தொடங்குகிறது முதல் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலிய மகளிர் அணி விளையாடுகின்றன. இந்த உலகக் கோப்பை தொடரில் மிகவும் பலம் வாய்ந்த அணிகள் முதல் போட்டியிலேயே மோதவுள்ளதால் இப்போட்டி பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் டி20 உலகக் கோப்பையில் இதற்கு முன்னர் நடைபெற்ற இந்திய-ஆஸ்திரேலிய போட்டிகளை சற்று ரீவைண்ட் செய்து பார்க்கலாம்.

2010 அரையிறுதி- இந்தியா vs ஆஸி.:

2010ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் ஜூலன் கோசாமி தலைமையில் இந்திய அணி மீண்டும் களமிறங்கியது. இந்திய அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது. இந்திய அணி அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து விளையாடியது.

முதலில் ஆடிய இந்திய அணி 119 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 18.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது. தொடர்ச்சியாக டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி பெற்ற இரண்டாவது தோல்வியாகும்.

2012 குரூப் போட்டி- இந்தியா vs ஆஸி.:

2012ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் ஒரே பிரிவில் இடம்பெற்று இருந்தன. இதனால் குரூப் போட்டியில் இந்தியா-ஆஸி. அணிகள் மோதின. இதில் முதலில் ஆடிய இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக பூனம் ராவத் 21 ரன்கள் அடித்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

2018 குரூப் போட்டி: இந்தியா vs ஆஸி.:

2018ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக குரூப் போட்டியில் களமிறங்கியது. இதில் முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தானா 55 பந்துகளில் 83 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 27 பந்துகளில் 43 ரன்கள் விளாசினார்.

பின்னர் விளையாடிய ஆஸி. அணி இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. குறிப்பாக சுழற் பந்து வீச்சில் ஆஸி. வீராங்கனைகள் திணறினர். இதனால் ஆஸ்திரேலிய அணி 119 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து பரிதாபமாக தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக சுழற்பந்துவீச்சாளர் அனுஜா பாட்டீல் 3 விக்கெட்களையும், தீப்தி சர்மா, பூனம் யாதவ் மற்றும் ராதா யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் சாய்த்தனர். இந்த உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணி தோல்வி அடைந்த ஒரே போட்டி இப்போட்டி தான்.

எனவே இதுவரை மகளிர் டி20 உலகக் கோப்பையில் இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் மூன்று முறை மோதியுள்ளன. இதில் ஆஸ்திரேலிய அணி 2 முறையும் இந்திய அணி ஒரு முறையும் வெற்றிப் பெற்றுள்ளன. இந்தச் சூழலில் இன்று நடைபெறும் நான்காவது போட்டியில் இந்திய அணி வெற்றிப் பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.