டி20 உலகக் கோப்பை: பூனம் சுழலில் மண்ணை கவ்விய ஆஸி. அணி

Update: 2020-02-21 11:10 GMT

ஐசிசி மகளிருக்கான கிரிக்கெட் டி-20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கியது. சிட்னியில் தொடங்கிய முதல் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 4விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக இந்தியாவின் தீப்தி சர்மா 49*, ஷாபாலி வர்மா 29, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 26, மந்தானா 10 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஜோனசன் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீராங்கனைகள் இந்தியாவின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். குறிப்பாக ஹீலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பெத் மூனி 6 ரன்கள் எடுத்திருந்த போது ஷிகா பாண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். எனினும் ஆஸ்திரேலிய அணி 6 ஓவர்களின் முடிவில் ஒரு விக்கெட்ட் இழப்பிற்கு 33 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய கேப்டன் மேக் லென்னிங் 5 ரன்களில் ராஜேஸ்வரி பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார். எனினும் மறுபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹீலி அரைசதம் கடந்தார். இவர் 35 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சரின் உதவியுடன் 51 ரன்கள் எடுத்து பூனம் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 10ஓவர்களின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலிய அணி வெற்றியை நோக்கி எளிதாக பயணித்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் 12ஆவது ஓவரை வீசிய அனுபவ சுழற்பந்து வீச்சாளர் பூனம் யாதவ் ஒரே ஓவரில் முதலில் ஹெய்ன்ஸ்(6), பின்னர் பெரி(0) என அடுத்தடுத்து இரண்டு விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இதனால் 12 ஓவர்களின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் எடுத்து திணறியது.

இதனைத் தொடர்ந்து மீண்டும் 14ஆவது ஓவரை வீசிய பூனம் யாதவ் ஜோன்சனை (2) விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.இதன்பின்னர் வந்த சதர்லாந்தும் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிக நம்பிக்கை அளித்த கார்டனர் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 19.4 ஓவர்களில் 115 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதனால் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

இதன்மூலம் 2020ஆம் ஆண்டு மகளிர் டி20 உலகக் கோப்பையின் முதல் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை தோற்கடித்தது. அத்துடன் இந்திய அணியின் உலகக் கோப்பை கனவு வெற்றியுடன் துவக்கியுள்ளது. சிறப்பாக பந்துவீசிய பூனம் யாதவ் 19 ரன்களுக்கு 4 விக்கெட்களை சாய்த்து அசத்தினார்.