ஐசிசி மகளிர் டி-20 உலகக் கோப்பை: வங்கதேசத்துக்கு எதிரான இந்திய அணியின் வெற்றி தொடருமா?

Update: 2020-02-24 04:05 GMT

ஐசிசி மகளிர் டி-20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் தொடங்கியுள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வென்ற இந்திய அணி, அடுத்த போட்டியில் வங்கதேச அணியை எதிர்கொள்கிறது.

முதல் போட்டியை வென்ற உற்சாகத்தில் களமிறங்க இருக்கும் இந்திய அணி, இந்த போட்டியிலும் வெற்றி பெற்று அரை இறுதி வாய்ப்பை தக்க வைத்து கொள்ள மெனக்கிடும். இன்று மாலை நடக்க இருக்கும் இந்தியா vs வங்கதேச போட்டி தொடங்குவதற்கு முன்னால், இரு அணிகளின் டி-20 உலகக் கோப்பை மோதல்கள் பற்றிய சின்ன ரீவைண்டு

2009-ம் ஆண்டு முதல் மகளிருக்கான டி-20 உலகக் கோப்பைடி நடந்து வருகிறது. ஆனால், 2013-2014 சீசனில் தான் முதல் முறையாக வங்கதேச அணி உலகக் கோப்பைக்கு தேர்ச்சி பெற்றது. இதனால், டி-20 உலகக் கோப்பைகளில் இந்தியா vs வங்கதேச முதல் போட்டி அப்போதுதான் நடந்தது.

2013-2014

மித்தாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி, டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்வுமன் ஹர்மன்பிரீத் கவுர் 77 ரன்களும், மித்தாலி ராஜ் 41 ரன்களும் எடுத்தனர். இதனால் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 151 ரன்கள் எடுத்தது.

இதனை தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச அணி, 100 ரன்களுக்குள் ஆட்டத்தை முடித்து கொண்டது. இந்திய அணியின் பவுலிங் யூனிட் விக்கெட்டுகளை அள்ளினர். ஜுலன் கோஸ்வாமி, சுபலக்‌ஷ்மி ஷர்மா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகள் எடுத்தனர். சுழற்பந்துவீச்சாளர் பூனம் யாதவ் இரண்டு விக்கெட் எடுத்தார். இதனால், 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த வங்கதேச அணி வெறும் 72 ரன்கள் எடுத்திருந்தது. இதனால், இந்த போட்டியை 79 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது

2015-2016

இந்தியாவில் நடந்த இந்த சீசனின் முதல் போட்டியிலேயே வங்கதேச அணியை இந்தியா எதிர்கொண்டது. பெங்களூருவில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு வழக்கம் போல மித்தாலி ராஜ், ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோர் ரன் சேர்த்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது இந்திய அணி

அடுத்து களமிறங்கிய வங்கதேச அணி, தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்தது. பூனம் யாதவ், அனுஜா பாட்டீலின் சுழலில் சிக்கிய வங்கதேச பேட்ஸ்வுமன்கள் விக்கெட்டுகளை இழந்தனர். 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்கள் மட்டுமே எடுத்தது வங்கதேசம். இதனால், இம்முறையும் 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது

2018-2019 சீசனில் இரு அணிகளும் வெவ்வேறு பிரிவுகளில் இருந்ததால், நேருக்கு நேர் மோதவில்லை. நாக்-அவுட் சுற்றுக்கு வங்கதேச அணி தகுதி பெறவில்லை. அரை இறுதி வரை முன்னேறிய இந்திய அணி, இங்கிலாந்து அணியிடம் தோல்வியுற்றது

இதுவரை இந்தியா - வங்கதேச அணிகள், டி-20 உலகக் கோப்பையில் இரண்டு முறை மட்டுமே மோதியுள்ளன. இன்றைக்கு நடக்க இருக்கும் போட்டியில் வெற்றி பெற்று வங்கதேசத்துக்கு எதிரான வெற்றியை தொடர இந்திய அணி காத்திருக்கிறது.