ஐசிசி 2020 மகளிர் டி20 உலகக்கோப்பை: இன்றைய போட்டியிலிருந்து இந்தியா கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள்

Update: 2020-02-21 18:00 GMT

ஏழாவது ஐசிசி டி20 மகளிர் உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது கோப்பையை வெல்லும் என கருதப்படும் அணிகளில் ஒன்றான இந்தியா.

டாஸ் வென்று இந்தியாவை முதலில் பேட் செய்ய அழைத்தது ஆஸ்திரேலியா. அதிரடியாக ஆரம்பித்தாலும் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்ததால் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணியால் 132 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. ஆஸ்திரேலியா எளிதில் வென்று விடும் என அனைவரும் எதிர்பார்த்தது போல் அதிரடியாக ஆட்டத்தினை ஆரம்பித்தார்கள். ஆனால் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் மாயஜாலத்தை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர். ஆட்டத்தின் முடிவில் 115 ரன்களை மட்டுமே எடுத்து 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தனர்.

இந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றிருந்தாலும் அடுத்த ஆட்டத்தில் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. அவற்றில் சிலவற்றை காணுவோம்:

ஷஃபாலி வர்மா

இந்திய அணிக்கு தனது அதிரடி தொடக்கம் எவ்வளவு முக்கியம் என்பதை மீண்டும் ஒருமுறை நிருபித்துள்ளார் இவர். 16 வயதே ஆகி இருந்தாலும் எந்தவித பயமும் இன்றி விளையாடி அசத்தினார்.

பூனம் யாதவ் மற்றும் ஷிகா பாண்டே

இந்திய அணியின் மூத்த பந்து வீச்சாளர்களான இவர்கள் தான் இன்றைய ஆட்டத்தின் போக்கினை மாற்றியவர்கள். மிடில் ஓவர்களில் பூனம் தனது சுழலினால் மிரட்ட, இறுதி ஓவர்களில் தனது அனுபவத்தினால் இந்தியாவிற்கு வெற்றியை பெற்று தந்தார் ஷிகா பாண்டே.

சொதப்பல்கள்

ஷஃபாலி அதிரடியாக ஆடினாலும் மற்ற முக்கிய வீரர்கள் பெரிதாக சோபிக்கவில்லை. முக்கியமாக பொருப்பாக ஆடவேண்டிய அணித்தலைவரே தேவயில்லாத ஷாட் ஆடி அவுட் ஆனது ஏமாற்றமளிக்கிறது. ஜெமிமா மற்றும் தீப்தி பொருப்பாக ஆடினாலும் கடைசி கட்டத்தில் அடித்து ஆடக்கூடியவர்கள் இல்லாதது இந்திய அணிக்கு பெரும் கவலை அளிப்பதாகும்.

அனுபவம் வாய்ந்த வேதா கிருஷ்ணமூர்த்தியாலும் வேகமாக ரன்களை சேர்க்க முடியவில்லை. ரிச்சா போன்ற புதிய வீரர்கள் வெளியில் இருப்பதால் அடுத்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய வேண்டிய நெருக்கடியில் உள்ளார் வேதா. ஆஸ்திரேலியாவில் மைதானங்கள் எப்பொழுதும் பெரியதாக இருக்கும். இது போன்ற இடங்களில் ஓட்டங்களில் ரன்கள் எடுப்பது மிகவும் அவசியம். இந்திய அணி இன்று முற்றிலுமாக செய்ய தவறிவிட்டது. அதேபோல் பீல்டிங்கிலும் இன்னும் துடிப்பாக செயல்பட்டு ரன்களை கட்டுப்படுத்த வேண்டும்.

பூனம் மற்றும் ஷிகா ஆகியோரின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தாலும் துணை வேகப்பந்து வீச்சாளர் இல்லாதது சிக்கல் ஆகும். அனைத்து போட்டிகளிலும் சுழற்பந்து வீச்சினை மட்டுமே நம்பி களத்தில் இறங்க முடியாது. அடுத்த ஆட்டத்தில் அணியில் மேலுமொரு ஆல்ரவுண்டரை இணைப்பதை பற்றி நிச்சயமாக பரிசீலிக்க வேண்டும்.

நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை வீழ்த்தி மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் இந்திய அணி, இந்த சிறிய விஷயங்களை திருத்திக்கொண்டு அடுத்த ஆட்டங்களில் மேலும் சிறப்பாக விளையாடும் என நம்புவோம்.