2020 பி.பி.எல் - வெற்றி கணக்கைத் தொடங்கியது பி.வி சிந்து அண்டு கோ!

Update: 2020-01-26 18:12 GMT

2020 பிரீமியர் பேட்மிண்டன் லீக் போட்டிகள் லக்னோவில் நடைபெற்று வருகிறது. பாபு பனாரசி தாஸ் யூ.பி பேட்மிண்டன் அகாடெமியில் இன்று நடந்த டையில் அவாதி வாரியர்ஸ் - ஹைதராபாத் ஹண்டர்ஸ் அணிகள் மோதின.

இந்த சீசனின் முதல் டையில் சென்னை அணியிடம் தோல்வியைத் தழுவிய ஹைதராபாத் அணி, வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்கியது. முதலில் தொடங்கிய ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியில், அவாதி அணியின் தே போட்டியை இழந்து அதிர்ச்சி கொடுத்தார். 15-14, 12-15, 10-15 என்ற செட் கணக்கில் ஹைதராபாத்தின் வெர்மா போட்டியை வென்றார்.

அடுத்து நடந்த கலப்பு இரட்டையர் பிரிவு போட்டியிலும் ஹைதராபாத்துக்கே வெற்றி கிடைத்தது. 12-15, 14-15 என்ற நேர் செட் கணக்கில் இவானோவ் - என்.எஸ் ரெட்டி இணை சியோல் - பெடெர்சன் இணையை வென்றது.

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியில், பி.வி சிந்துவுக்கு எளிதான வெற்றி

கிடைத்தது. 8-15, 8-15 என்ற நேர் செட் கணக்கில் சிந்து வெற்றி பெற்றார். இதன் மூலம்,

மூன்று போட்டிகளை வென்றிருந்த ஹைதராபாத் அணி 0-3 புள்ளிகளுடன் முன்னிலை வகித்தது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட மற்றுமொரு ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டி ஹைதராபாத் அணிக்கு டிரம்ப் கேமாக இருந்தது. இதில், 15-4, 15-9 என்ற செட் கணக்கில் அவாதியின் வின்செண்டிடம் ஹைதராபாத் அணியின் லியூ தோல்வியைத் தழுவினார். இதனால் ஹைதராபாத் அணிக்கு ஒரு புள்ளி குறைக்கப்பட்டது.

ஏற்கனவே தனது டிரம்ப் கேமை இழந்திருந்த அவாதி அணி, -2 புள்ளிகளை கொண்டிருந்தது. அதனால், இந்த வெற்றியின் மூலம் 0 புள்ளிகளுடன் களத்தில் இருந்தது.

கடைசி போட்டியான ஆண்கள் இரட்டையர் பிரிவு போட்டியில், அவாதியின் ஹியூன் -

சியோல் இணை 15-12, 15-8 என்ற செட் கணக்கில் இவானோ - லேன் இணையை வென்றது. இதனால்,

அவாதி அணிக்கு 1 புள்ளி கிடைத்தது.

ஐந்து போட்டிகளின் முடிவில், 1-2 என்ற புள்ளிக்கணக்கில் ஹைதராபாத் அணி டையை வென்றது.

இதன் மூலம், இந்த சீசனின் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது சிந்து அண்டு கோ.