‘இந்தியா விற்பனைக்கு அல்ல’- ஹிட்லரை அதிர வைத்த தயான்சந்த் ஆக. 15 ஃபிளாஷ்பேக் 

Update: 2020-08-14 12:19 GMT

ஹாக்கி உலகில் அசைக்க முடியாத ஒரு சக்தியாக இந்தியா உருவெடுத்ததற்கு முக்கியமான காரணம் தயான் சந்த் என்ற வீரர் தான். இவர் தனது அசத்தலான ஆட்டத்தால் கோல் மழை பொழிந்து எதிரணியை திணற வைக்க கூடியவர். இந்திய அணி 1928,1932 மற்றும் 1936 ஆகிய மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக ஒலிம்பிக் தங்கம் வெல்ல இவர் ஒரு முக்கிய காரணமாக இருந்தார்.

அந்தவகையில் தயான் சந்திற்கு 1936ஆம் ஆண்டு ஒலிம்பிக் தொடர் மிகவும் மறக்க முடியாத அனுபவத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக முன்னாள் ஹாக்கி பயிற்சியாளர் சையத் அலி நக்வி ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார்.

அதில், “1936ஆம் ஆண்டு பெர்லின் ஒலிம்பிக் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி பிரான்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் இந்திய அணி 10 கோல் அடித்து அசத்தியது. இதில் தயான்சந்த் மட்டும் நான்கு கோல் அடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 15ஆம் தேதி ஒலிம்பிக் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா-ஜெர்மனி அணிகள் மோதின.

இந்தப் போட்டியை ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லர் நேரில் பார்வையிட வந்திருந்தார். இதனால் ஆட்டத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இந்தப் போட்டியில் வழக்கம் போல இந்திய வீரர்கள் ஜெர்மனி அணியை கோல் மழை பொழிந்து திணறடித்தனர். மொத்தமாக இந்திய அணி 8 கோல் அடித்தது. இதில் தயான் சந்த் மட்டும் 6 கோல் அடித்து அசத்தினார்.

இதனைத் தொடர்ந்து இந்திய அணிக்கு தங்கப்பதக்கம் அளிக்கும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது ஹிட்லர் தயான்சந்தை பாராட்டி ஜெர்மனி இராணுவத்தில் சேர அழைத்தார். இதற்கு தயான் சந்த் ‘இந்தியா விற்பனைக்கு அல்ல’ என்ற பதிலை அளித்தார்.

அதற்கு ஹிட்லர், ‘உங்களுடைய நாட்டுப் பற்றுக்கு மொத்த ஜெர்மனியும் தலைவணங்குகிறது’ என்று தெரிவித்தார். அத்துடன் ஹிட்லர் தயான்சந்தை பார்த்து சல்யூட் அடித்தார். மேலும் தயான் சந்திற்கு ஹாக்கியின் மந்திரவாதி (Wizard of Hockey) என்ற பட்டத்தையும் ஹிட்லர் அளித்தார்“ எனக் கூறியுள்ளார்.

பயிற்சிக்கு வந்த இந்திய பேட்மிண்டன் வீராங்கனைக்கு கொரோனா தொற்று உறுதி

இந்திய சுதந்திரம் அடைவதற்கு 11 ஆண்டுகள் முன்பாகவே அந்நாளில் தயான்சந்த் தனது தேசப்பற்றை வெளிப்படுத்தி அப்போதைய பெருங்தலைவரை அதிரவைத்துள்ளார். இந்தச் சுதந்திர தினமட்டுமல்லாது ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் இதனை நாம் நினைவு கூறவேண்டும். தயான்சந்தின் பிறந்தநாளான ஆகஸ்ட் 29ஆம் தேதி தான் தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: தமிழகத்தைச் சேர்ந்த தட்சிணாமூர்த்திக்கு கிடைக்குமா துரோணாச்சார்யா விருது?