புரோ லீக் ஹாக்கி: பெல்ஜியத்தை ஒடிசாவில் முதல் முறையாக வீழ்த்தி இந்தியா சாதனை வெற்றி

Update: 2020-02-08 13:47 GMT

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பான எஃப்.ஐ.ஹெச் சார்பில் புரோ லீக் என்ற தொடர் கடந்த ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டிற்கான புரோ லீக் தொடர் ஜனவரி மாதம் 11ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்தத் தொடரில் முதல் முறையாக இந்திய அணி பங்கேற்று உள்ளது. இந்திய அணி தனது முதல் இரண்டு போட்டிகளில் பலம் வாய்ந்த நெதர்லாந்து அணியை எதிர்கொண்டது. இந்த இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய இந்திய அணி நெதர்லாந்து அணியை வீழ்த்தியது.

இதனைத் தொடர்ந்து ஒடிசாவில் இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்திய அணி உலக சாம்பியன் பெல்ஜியத்தை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தின் 90 விநாடிக்குள் இந்திய அணியின் மன்தீப் சிங் அசத்தலாக ஒரு கோலை அடித்தார்.

அதன்பின்னர் கோல் அடிக்க இரு அணி வீரர்களும் எடுத்த முயற்சிகள் வீணானது. இதனால் முதல் பாதியின் முடிவில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. முதல் கால்பாதியில் கிருஷ்ணன் பதாக் மற்றும் இரண்டாவது கால்பாதியில் ஶ்ரீஜேஷ் ஆகிய இருவரும் சிறப்பான கோல் கீப்பிங்கை வெளிபடுத்தினர். இதன்காரணமாக பெல்ஜியம் அணி கோல் போட முடியாமல் தவித்தது.

மூன்றாவது கால்பாதியில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட பெல்ஜியம் அணி தனது முதல் கோலை அடித்தது. இதனால் 1-1 என்ற சமனிலையில் இரு அணிகளும் இருந்தன. இதனைத் தொடர்ந்து இரு அணி வீரர்களும் கோல் அடிக்க பல முயற்சிகள் மேற்கொண்டனர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 55ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்திய இந்திய வீரர் ராமன்தீப் சிங் அருமையாக ஒரு கோலை அடித்தார். இதன்மூலம் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றது. கடைசி வரை பெல்ஜியம் அணி கோல் அடிக்க எடுத்த முயற்சி கைகூட வில்லை.

எனவே இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணியை வீழ்த்தியது. மேலும் ஒடிசாவின் கலிங்கா மைதானத்தில் பெல்ஜியம் அணியை முதல் முறையாக இந்திய அணி வீழ்த்தியுள்ளது. அத்துடன் நடப்புப் புரோ லீக் தொடரில் இதுவரை தோல்வி அடையாத பெல்ஜியம் அணியை வீழ்த்தி இந்திய அணி வரலாறு படைத்துள்ளது. இந்த இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி நாளை மாலை ஒடிசாவின் கலிங்கா மைதானத்தில் நடைபெறுகிறது. அந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றிப் பெற்று பெல்ஜியத்தை அதிர்ச்சி அடைய செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.