'வேர்ல்ட் கேம்ஸ் அத்லெட் விருது' வென்ற ராணி ராம்பாலுக்குப் பணி உயர்வு

Update: 2020-02-01 03:34 GMT

மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் வேர்ல்ட் கேம்ஸ் அத்லெட் ஆஃப் தி இயர் 2019 விருதை அதிக வாக்குகள் பெற்று வென்றார். இதற்கான அறிவிப்பு கடந்த வியாழக்கிழமை வெளியானது. சர்வதேச அளவில் இந்த விருதை பெறும் முதல் இந்தியர் ராணி ராம்பால் தான்.

இந்நிலையில் இந்த விருதை வென்ற ராணி ராம்பாலை கௌரவிக்கும் விதமாக இந்தியா விளையாட்டு ஆணையம்(SAI) அவருக்குப் பணி உயர்வு அளித்துள்ளது. அதன்படி ராணி ராம்பால் இந்திய விளையாட்டு ஆணையத்தில் பயிற்சியாளராக பணி உயர்த்தம் பெற்றுள்ளார்.

ராணி ராம்பால் கடந்த 2015ஆம் ஆண்டு இந்திய விளையாட்டு ஆணையத்தில் துணை பயிற்சியாளராக பணியில் சேர்ந்தார். தற்போது அவருக்கு அந்தப் பதவியிலிருந்து பயிற்சியாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, "இந்திய விளையாட்டு ஆணையத்தின் முக்கிய பணி விளையாட்டு வீரர்களின் நலன் காப்பது தான். மேலும் விளையாட்டு வீரர்களுக்கு உரிய அங்கிகாரத்தை வழங்கி அவர்கள் நன்றாக விளையாட வழிவகை செய்வது ஆணையத்தில் கடமைகளில் ஒன்று. நாட்டிற்காக பல சாதனைகள் செய்த ராணி ராம்பாலுக்கு பணி உயர்வு வழங்கியதான் சரியான கைமாறாக இருக்க முடியும்" எனக் கூறியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய விளையாட்டு ஆணையம் விளையாட்டு வீரர்களை தங்களது மையங்களில் பயிற்சியாளர்களாக பணியமர்த்தி வருகிறது. இதன்மூலம் விளையாட்டு வீரர்களுக்கு ஒரு நிலையான ஊதியத்தை தந்து வருகிறது. அதன்படி தடகள வீரர் முகமது அனாஸ் யஹியா,சரத் குமார், வீராங்கனை ஓ.பி.ஜெய்ஷா, அஸ்வினி ஆகியவர்கள் இந்திய விளையாட்டு ஆணையத்தில் ஏற்கெனவே பயிற்சியாளர்களாக பணி புரிந்து வருகின்றனர்.

https://twitter.com/Media_SAI/status/1223245299969220610

இந்திய மகளிர் அணியின் கேப்டன் ராணி ராம்பாலுக்கு கடந்த 2016ஆம் ஆண்டு இந்திய அரசு அர்ஜூனா விருது வழங்கியது. அத்துடன் கடந்த குடியரசுத் தினத்தை முன்னிட்டு ராணி ராம்பாலுக்கு பத்மஶ்ரீ விருதை மத்திய அரசு அறிவித்தது. இந்தச் சூழலில் தற்போது விளையாட்டு ஆணையமும் பணி உயர்வு வழங்கி கெளரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

15வயது முதல் இந்தியாவிற்காக ஹாக்கி போட்டியில் களமிறங்கி வரும் ராணி ராம்பால் தனது 25ஆவது வயதில் யாரும் நினைத்து கூட பார்க்க முடியாத சாதனைகளை செய்துள்ளார். இவர் இந்த வருடம் சிறப்பாக செயல்பட்டு இந்திய மகளிர் ஹாக்கி அணி டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல செய்வார் என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.