“ஷாபாலியின் அதிரடி பேட்டிங்கை தடுக்க மாட்டோம்” மகளிர் இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத்

Update: 2020-03-01 17:35 GMT

ஐசிசி மகளிர் டி-20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. நான்கு லீக் போட்டிகளையும் வென்ற இந்திய அணி, முதல் அணியாக அரை இறுதிக்கு முன்னேறிவிட்டது.

இலங்கை அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில், எளிதான இலக்கை சேஸ் செய்ய களமிறங்கியது இந்திய அணி. வழக்கம்போல ஸ்மிரிதி மந்தானா, ஷாபாலி வெர்மா இணை ஓப்பனிங் கொடுத்தது.

34 ரனக்ளுக்கு இந்த இணை களத்தில் நின்றது. ஸ்மிரிதி மந்தானா 17 ரன்கள் எடுத்திருந்தபோது பிரபூதனியின் ஓவரில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். விக்கெட் சரிந்தாலும், மறுபுறம் ஷாபாலியின் அதிரடி தொடர்ந்தது. சிங்கிள்ஸ் எடுத்து கொண்டே, முடிந்த நேரத்தில் பவுண்டரிகளையும், 1 சிக்சரும் அடித்தார். 47 ரன்கள் எடுத்திருந்தபோது ஷாபாலி அவுட்டானார்

இந்த உலகக் கோப்பையில் இந்திய அணியின் பேட்டிங் நம்பிக்கையாக ஷாபாலி விளையாடி வருகிறார். 16 வயதேயான இளம் ஓப்பனிங் பேட்ஸ்வுமன், கேம் சேஞ்சராக விளையாடி வருகிறார்.

2020 உலகக் கோப்பையில் இதுவரை ஷாபாலி வெர்மா

  • Vs ஆஸ்திரேலியா - 29 ரன்கள் (15 பந்துகளில்)
  • Vs பங்ளாதேஷ் - 39 ரன்கள் (17 பந்துகளில்)
  • Vs நியூசிலாந்து - 46 ரன்கள் (34 பந்துகளில்)
  • Vs இலங்கை - 47 ரன்கள் (34 பந்துகளில்)

2020 டி-20 உலகக் கோப்பையில், இதுவரை 161 ரன்கள் எடுத்துள்ளார் ஷாபாலி. 18 பவுண்டரிகள், 9 சிக்சர்கள் என அசத்தி வருகிறார். ஷாபாலியின் ஆட்டத்தை குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், “அதிரடி ஆட்டத்தை விரும்புவர் ஷாபாலி. அதனால், நாங்களும் அவரது ஆட்டத்துக்கு தடை விதிப்பதில்லை. இதை அவர் தொடர்ந்து செய்ய வேண்டும். அவருக்கு பிடித்த ஸ்டைலில் கிரிக்கெட் விளையாட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.