51ஆவது பிறந்தநாள் கொண்டாடும் ‘டைகர் ஆஃப் மெட்ராஸ்’ விஸ்வநாதன் ஆனந்த்!

Update: 2020-12-11 06:08 GMT

செஸ் விளையாட்டில் 5 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளவர் விஸ்வநாதன் ஆனந்த். இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டரான விஸ்வநாதன் ஆனந்த் இன்று தனது 51ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இந்நிலையில் இவர் அண்மையில் தனது செஸ் அகாடமி தொடர்பாக ஒரு பேட்டியை அளித்தார். அதில் வெஸ்ட் பிரிட்ஜ் கேபிடல் என்ற நிறுவனத்துடன் தனது அகாடமியை தொடங்க உள்ளதாக விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்தார். மேலும் அவர், “செஸ் விளையாட்டை ஒலிம்பிக் போட்டிகளில் சேர்க்க வேண்டும். அப்போது தான் செஸ் விளையாட்டு அதிக வளர்ச்சியை பெரும். அது கண்டிப்பாக செஸ் விளையாட்டிற்கு அதிக பயனை தரும். செஸ்.காம் தளத்திற்கு 13 மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ் உள்ளனர். அதேபோல நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் அதிகமாக பார்க்கப்பட்ட ‘குயின் கேம்பிட்’ என்ற செஸ் தொடர்பான தொடர் தான். இவற்றை வைத்து பார்க்கும் போது செஸ் விளையாட்டின் வளர்ச்சி தெரிகிறது.

நான் பயிற்சியாளர் என்பதற்கு பதிலாக நல்ல ஆலோசகராகவே இருக்க விரும்புகிறேன். என்னுடைய அகாடமியிலும் நான் அவ்வாறு இருக்கவே விரும்புகிறேன்” எனத் தெரிவித்தார். விஸ்வநாதன் ஆனந்த் தனது அகாடமியில் பிரக்ஞானந்தா, நிஹல் சரண், வைஷாலி உள்ளிட்ட 5 வீரர்களுக்கு ஆலோசகராக செயல்பட உள்ளார்.

1969ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி மயிலாடுதுறையில் பிறந்தவர் விஸ்வநாதன் ஆனந்த். தனது தாய் சுசிலாவிடமிருந்து செஸ் விளையாட்டை விஸ்வநாதன் ஆனந்த் கற்றுக் கொண்டார். 1988ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் என்ற பட்டத்தை பெற்றார். அதன்பின்னர் 2000, 2007,2008,2010,2012 என 5 முறை உலகச் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார். 1991ஆம் ஆண்டு வழங்கப்பட்ட முதல் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை விஸ்வநாதன் ஆனந்த் வென்றார்.

இவை தவிர செஸ் ஆஸ்கார் சிறந்த செஸ் வீரர் என்ற பட்டத்தை 1997,1998,2003,2004,2007,2008 என ஆறு முறை வென்று அசத்தினார். இந்த விருதை வென்ற 5 முறைக்கு மேல் வென்ற ரஷ்யாவை சாராத ஒரே வீரர் ஆனந்த் தான். இத்தகைய சிறப்பு வாய்ந்த விஸ்வநாதன் ஆனந்தின் பிறந்தநாளில் அவரின் ஆலோசகர் பயணம் சிறப்பாக அமைய வேண்டும் என்று நாம் வாழ்த்துவோம்.

மேலும் படிக்க: ஆண்டின் சிறந்த விளையாட்டு வீராங்கனை விருதை வென்ற தமிழ்நாட்டின் இளவேனில்!