‘போலியோ பாதிப்பு முதல் வீல் சேர் கூடைப்பந்து வரை’- ஒரு பெண்ணின் வெற்றிப் பயணம். 

Update: 2020-09-02 16:12 GMT

வாழ்க்கையில் சாதிக்க ‘மனம் இருந்தால் போதும் வேறு எதுவும் தேவையில்லை’ என்பதற்கு நாம் அன்றாடம் வாழ்வில் சந்திக்கும் சிலர் சான்றாக உள்ளனர். அந்தவகையில் ஒரு மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் சாதனை செய்துள்ளார். அவர் யார்? அப்படி என்ன சாதனைப் பயணத்தை மேற்கொண்டு உள்ளார்?

இந்திய வீல்சேர் கூடைப்பந்து சங்கத்தின் தலைவர் மாதவி லதா. இவர் ஒரு மாற்றுத்திறனாளி. தனது வாழ்வில் தான் கடந்த வந்த சாதனைப் பயணம் தொடர்பாக லதா ‘த லாஜிகல் இந்தியன்’ என்ற தளத்தில் ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். அந்தக் கட்டுரை பலருக்கு பெரிய ஊக்கமாக அமைந்துள்ளது.

அந்தக் கட்டுரையில், “நான் தெலங்கானா மாநிலம் சத்துப்பள்ளி பகுதியில் பிறந்தேன். எனக்கு சிறிய வயதில் போலியோ பாதிப்பு ஏற்பட்டது. இதனால் நான் மற்றவர்களின் உதவியுடன் தான் நடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. என் நண்பர்களை என்னை தூக்கி கொண்டு சென்று விளையாட வைப்பார்கள். எனினும் நான் சற்று வளர்ந்த பிறகு நான் விளையாடுவதை நிறுத்தி விட்டேன். அத்துடன் விளையாட்டிற்கும் எனக்கும் நெடு தூரம் என்ற எண்ணமும் எனக்குள் தோன்றியது.

வீல் சேர் கூடைப்பந்து வீராங்கனைகள்(கோப்புப் படம்)

எங்களது பகுதியில் வீல் சேர் அப்போது அவ்வளவு பிரபலமல்ல. மேலும் நாங்கள் அதனை வாங்கும் சூழல் அப்போது இல்லை. இதனால் படிப்பு மீது கவனம் செலுத்த ஆரம்பித்தேன். அங்கும் நிறையே இன்னல்களை நான் சந்தித்தேன். எனினும் அதனை கண்டு துவண்டுவிடாமல் படித்து முடித்தேன். இதனைத் தொடர்ந்து பட்டபடிப்பு முடிந்தவுடன் வங்கி துறையில் வேலை கிடைத்தது.

அங்கும் நான் சிறப்பாக பணி செய்தேன். அத்துடன் வங்கி சார்ந்த சில படிப்புகளை படித்து முடித்தேன். நான் அதிக நேரம் வங்கியில் உட்கார்ந்து பணி செய்ததால் எனது உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து எனக்கு மருத்துவர்களிடம் ஆலோசனைக்கு சென்றேன். அப்போது ஒரு மருத்துவர் நான் ஒராண்டு வரை தான் உயிருடன் இருப்பேன் எனக் கூறினார்.

அதனைக் கண்டு மனம் தளராமால் பிசியோதெரபி சிகிச்சை மேற்கொண்டேன். அப்போது எனக்கு ஹைட்ரோதெரபி சிகிச்சையும் செய்யப்பட்டது. அப்போது சென்னையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில் எனக்கு நீச்சல் மீது ஆர்வம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து என்னுடைய கார்பிரேட் நிறுவனத்தின் சார்பாக ஒரு நீச்சல் போட்டியில் கலந்து கொண்டேன். அந்தப் போட்டியில் ‘ஊக்கமளிக்கும் சிறந்த விளையாட்டு வீராங்கனை’ என்ற விருதை பெற்றேன். அப்போது முதல் என்னுடைய வாழ்வில் எல்லாம் வெற்றி முகம் தான்.

வீல் சேர் கூடைப்பந்து அணியுடன் மாதவி லதா

அதன்பின்னர் பாராலிம்பிக் நீச்சல் போட்டிகளில் பங்கேற்க ஆரம்பித்தேன். என்னுடைய 40 வயதில் தேசிய பாராலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றேன். 11ஆவது தேசிய பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று 3 தங்கப்பதக்கங்களை நான் வென்றேன். அத்துடன் நாங்கள் ஒன்று சேர்ந்து தமிழ்நாட்டு பாராலிம்பிக் நீச்சல் சங்கத்தை உருவாக்கினோம். அதன் மூலம் ஏறக்குறைய 300 வீரர் வீராங்கனைகள் இதுவரை தயார் செய்துள்ளோம்.

இதனையடுத்து ஒரு அமெரிக்க நிறுவனத்தின் மூலம் எனக்கு வீல் சேர் கூடைப்பந்து தொடர்பான அறிமுகம் கிடைத்தது. நீச்சல் போட்டி ஒரு தனி நபர் போட்டி என்பதால் சிலர் மட்டுமே அதில் பங்கேற்க முடியும். ஆனால் கூடைப்பந்து குழு போட்டி என்பதால் இன்னும் நிறையே பேர் விளையாட்டிற்கு வர முடியும். ஆகவே நான் இந்திய வீல் சேர் கூடைப்பந்து சங்கத்தை ஆரம்பித்தேன். அத்துடன் பலருக்கு அரசாங்கம் மற்றும் மாநில விளையாட்டு கூடம் மூலம் பயிற்சி அளித்தேன். அத்துடன் அவர்கள் பல பாராலிம்பிக் போட்டிகளில் விளையாடி வெற்றிப் பெற ஆரம்பித்தனர்.

மாதவி லதா

என்னைப் பொருத்தவரை வாழ்வில் நீங்கள் சாதிக்க நினைத்தால் அதற்கான முதல் அடியை எடுத்து வையுங்கள். அதன்பின்னர் அந்தப் பாதையில் பலர் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள்” என்று எழுதியுள்ளார்.

வாழ்வில் சாதிக்க காத்திருக்கும் பலருக்கு மாதவி லதாவின் பயணம் ஒரு தூண்டுகோளாக அமையும். 40 வயதில் தேசிய சாம்பியன் பட்டத்தை வென்ற லதாவின் பயணம் சாதிக்க வயது தடையில்லை என்பதையும் நிரூபித்துள்ளது. அத்துடன் ஒரு பெண் நினைத்தால் எதனையும் சாதித்துவிடலாம் என்ற நம்பிக்கையும் இந்தப் பயணம் நமக்கு கற்று தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: ‘வேலையில்லா பட்டதாரி முதல் விளையாட்டு விருது வரை’- இளைஞரின் சாதனைப் பயணம் !