மில்கா சிங்கிற்கு பிறகு தங்கம் வென்ற இந்தியர்- மறக்கப்பட்ட ஞானசேகரின் சாதனை!

Update: 2021-02-09 10:33 GMT

இந்தியா சார்பில் ஆசிய போட்டியில் கடைசியாக 200 மீட்டரில் பதக்கம் வென்ற வீரர் யார் என்ற கேள்விக்கு நம்மில் எத்தனை பேருக்கு பதில் தெரியும்? இந்தக் கேள்விக்கு பெரும்பாலானோர் மில்கா சிங் என்ற பதிலை தருவார்கள். ஆனால் அதற்கு சரியான பதில் அது இல்லை. இந்தக் கேள்விக்கு விடை ஒரு தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

இராமசாமி ஞானசேகரன் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பழையூர் எனும் கிராமத்தில் பிறந்தார். இவருக்கு சிறு வயது முதல் தடகளத்தில் ஆர்வம் எழுந்துள்ளது. இவருக்கு 4 வயதாக இருந்த போது 1958ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய போட்டியில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மில்கா சிங் தங்கம் வென்றார். அப்போது சிறுவனாக இருந்த ஞானசேகரன் மில்கா சாதனையை மீண்டும் 20 ஆண்டுகளுக்கு பிறகு செய்வார் என்று யாரும் நினைத்து கூட பார்க்கவில்லை.

இவர் 1978-ல் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 200 மீட்டர் மற்றும் 100 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்றார். இதில் 200 மீட்டர் பிரிவில் 21.47 விநாடிகளில் கடந்து தங்கப்பதக்கத்தை வென்றார். மேலும் 100 மீட்டர் பிரிவில் 10.60 விநாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கத்தை வென்று அசத்தினார்.

இவரின் சிறப்பான சாதனையை பாராட்டி 1978-1979 ஆம் ஆண்டில் அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. தனது ஓய்விற்கு பிறகு இவர் தடகள பயிற்சியாளராகவும் பணியாற்றி வருகிறார். மில்கா சிங்கிற்கு பிறகு 20 ஆண்டுகள் கழித்து ஞானசேகரன் தங்கம் வென்றார். அவர் தங்கம் வென்று 40 வருடங்கள் ஆகியும் இதுவரை வேறு யாரும் இந்தியாவிலிருந்து 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வெல்லவில்லை.

இவரின் சாதனையை எப்போது மீண்டும் இந்திய வீரர் ஒருவர் செய்வார் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். அதே சமயத்தில் இவரின் மகத்தான சாதனையை நாம் எப்போது மறக்காமல் போற்ற வேண்டும்

மேலும் படிக்க: ‘புதுக்கோட்டையிலிருந்து கோவிந்தன் லக்‌ஷ்மணன்’- தந்தையை இழந்த மகனின் சாதனைப் பயணம்!