ரேஸ்சிங் மன்னன் நரேன் கார்த்திகேயன் தற்போது என்ன செய்கிறார் தெரியுமா?

Update: 2021-01-25 06:18 GMT

இந்தியாவில் அதிகம் பேர் தொடராத விளையாட்டுகளில் ஒன்று கார் பந்தையம். அதிலும் குறிப்பாக ஃபார்முலா ஓன் கார் பந்தையங்கள் இந்தியாவில் பெரியளவில் வரவேற்பை பெற்றதில்லை. அந்தத் துறையிலும் ஒரு தமிழர் கால்பாதித்து சாதித்தார் என்றால் அது நம் நரேன் கார்த்திகேயன் தான். நம்மில் பலருக்கு ஃபார்முலா ஓன் கார் பந்தையம் பற்றி தெரியாமல் இருக்கலாம். ஆனால் நரேன் கார்த்திகேயனை தெரியாமல் இருக்க வாய்ப்பு குறைவு தான்.

ஏனென்றால் அவருடைய வளர்ச்சி அத்தகைய சிறப்பான ஒன்று. இந்தியாவின் மிக வேக கார் ரேஸிங் வீரர் என்றால் அது நம் நரேன் தான். இவரின் சாதனைகள் கருண் சந்தோக் உள்ளிட்ட சில வீரர்களை ஊக்குவித்து இந்தத் துறையை தேர்ந்தெடுக்க வைத்தது. 1992ஆம் ஆண்டு முதல் தனது கார் பந்தைய வாழ்க்கையை நரேன் தொடங்கினார். 1998ஆம் ஆண்டு ஃபார்முலா 3 ரக போட்டியில் இவர் பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து 2005ஆம் ஆண்டு ஜோர்டன் ரேஸ்சிங் அணிக்காக முதல் முறையாக ஃபார்முலா ஓன் பந்தையத்தில் இவர் களமிறங்கினார்.

இதனைத் தொடர்ந்து 2012ஆம் ஆண்டு வரை ஃபார்முலா ஓன் பந்தையத்தில் இவர் பங்கேற்று வந்தார். அதனைத் தொடர்ந்து 2013ஆம் ஆண்டு ஆட்டோ ஜிபி சூப்பர் ஃபார்முலா ரக பந்தையங்கள் பங்கேற்று வந்தார். கடைசியாக இவர் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற சூப்பர் ஜிடி ரக பந்தையத்தில் கலந்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து இந்தாண்டு வரும் பிப்ரவரி மாதம் துபாயில் தொடங்கவுள்ள ஆசிய லீ மேன்ஸ் ரேஸ்சிங் தொடரில் ரேஸ்சிங் டீம் இந்தியா அணிக்காக களமிறங்க உள்ளார். நீண்ட நாட்கள் இடைவேளைக்கு பிறகு நரேன் இத்தொடரில் களமிறங்க உள்ளார். இதனால் இவர் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: 25 ஆண்டுகளுக்கு முன்பாக கின்னஸ் சாதனைப் படைத்த குற்றாலீஸ்வரன் நீச்சல் விளையாட்டை விட்டது ஏன்?