டேக்ஸி ஓட்டும் முன்னாள் குத்துச்சண்டை வீரர் தயான்சந்த் விருதுக்கு பரிந்துரை 

Update: 2020-08-19 14:49 GMT

இந்தியாவில் பல முன்னாள் விளையாட்டு வீரர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் கதைகளை நாம் அன்றாடம் கேட்டுக் கொண்டு வருகிறோம். அந்தவகையில் முன்னாள் குத்துச்சண்டை வீரரான லக்கா சிங்கின் கதையும் அதே போன்றது தான். இவர் 1994ஆம் ஆண்டு இந்தியாவிற்காக ஆசிய போட்டியில் வெண்கலம் வென்றவர்.

இவரின் தற்போதைய நிலைமை மிகவும் மோசமான ஒன்று. இவர் தற்போது தனது வாழ்வாதாரத்திற்காக டேக்ஸி டிரைவராக வேலை செய்து வருகிறார். இந்தச் சூழலில் நேற்று அறிவிக்கப்பட்ட விளையாட்டு விருதுகளை பரிந்துரை பட்டியலில் இவர் இடம்பெற்றுள்ளார்.

விளையாட்டு துறையில் வாழ்நாள் சாதனையாளர் விருதான தயான்சந்த் விருதுக்கு லக்கா சிங் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். லக்கா சிங் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்தவர். இவர் கடந்த 1994ஆம் ஆண்டு ஹீரோசிமாவில் நடைபெற்ற ஆசிய போட்டியில் 91 கிலோ எடைப்பிரிவில் வெண்கலம் வென்றார். அத்துடன் ஐந்து முறை தேசிய சாம்பியன் பட்டத்தை வென்றவர். மேலும் அட்லாண்டா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்றவர்.

இவர் தனது ராணுவ பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு கடும் நிதி நெருக்கடியை சந்தித்தார். கடந்த ஆண்டு அர்ஜூனா விருது வென்ற குத்துச்சண்டை வீரர்கள் லக்கா சிங்கிற்கு நிதியுதவி அளித்தனர். இதனைத் தொடர்ந்து அவர் சற்று நெருக்கடியை கடந்து டேக்ஸி டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

இத்தகைய சூழலில் தவிக்கும் இந்த முன்னாள் விளையாட்டு வீரருக்கு தயான்சந்த் வாழ்நாள் சாதனையாளர் விருது மிகவும் பொருத்தமான ஒன்றாக அமையும். வாழ்நாள் சாதனையாளர் விருதில் கேடயம், 5 லட்ச ரூபாய் பரிசு தொகையும் கிடைக்கும். இது லக்கா சிங்கின் வாழ்வாதாரத்திற்கு மிகுந்த உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லக்கா சிங் போன்று இன்னும் நிறையே விளையாட்டு வீரர்கள் நம் கண்ணிற்கு தெரியாமல் இருந்து கொண்டுதான் உள்ளனர். அவர்களை அரசு உடனடியாக கண்டறிந்து அவர்களுக்கு ஏற்ற வேலை அல்லது நிதியுதவியை செய்ய வேண்டும் என்பதே விளையாட்டு ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

மேலும் படிக்க: டூட்டி சந்த், சாக்‌ஷி மாலிக், மனு பாக்கர் உள்ளிட்ட 29 பேர் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை