‘என்னுடைய ஐபிஎல் ஹீரோ நடராஜன் தான்’-இந்திய முன்னாள் கேப்டன் கபில்தேவ்

Update: 2020-11-21 02:53 GMT

ஐபிஎல் 2020 தொடரில் சிறப்பாக யார்க்கர் மழை பொழிந்தவர் நடராஜன். இதன்விளைவாக அவர் இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் இடையேயான டி20 தொடரில் இடம்பிடித்துள்ளார். நடராஜனின் பந்துவீச்சை ஐபிஎல் தொடரின் போது பலரும் பாராட்டி வந்தனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தற்போது நடராஜனை பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ பத்திரிகையின் நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

அதில், “இந்த ஐபிஎல் தொடரில் வேகப்பந்து வீச்சாளர்கள் பந்தின் வேகத்தைவிட ஸ்விங் தான் முக்கியம் என்பதை உணர்ந்துள்ளனர். அதனால் தான் சந்தீப் சர்மா 115-120 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீசினாலும், அவர் பந்தை ஸ்விங் செய்ததால் கடினமாக இருந்தார். அதுதான் அவருடைய மிகப் பெரிய பலமாக அமைந்தது.

என்னைப் பொருத்துவரை என்னுடைய ஐபிஎல் ஹீரோ நடராஜன். அந்த இளம் வீரர் எவ்வளவு அழகாக யார்க்கர் பந்துகளை தொடர்ந்து வீசினார். நான் இப்போதும் கூறுகிறேன் இன்னும் 100 ஆண்டுகள் கழித்தும் யார்க்கர் பந்து தான் சிறந்த பந்தாக இருக்கும்.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது நல்ல வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது. இதனை லாரா போன்ற ஜாம்பவான் வீரர்களே ஒத்துக் கொண்டுள்ளது எனக்கு பெரிய மகிழ்ச்சியை தருகிறது. எங்களுடைய காலத்தில் இந்திய அணிக்கு பவுன்ஸ் தரும் ஆடுகளத்தை அமைத்தால் எளிதில் வெற்றிப் பெறலாம் எனப் பல எதிரணிகள் நினைத்து உண்டு.

ஆனால் தற்போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை பார்த்தால் பவுன்ஸ் நிறைந்த ஆடுகளத்தை அமைத்தால் அது எதிரணிக்கும் பெரிய சவாலாக அமையும். கடந்த 15ஆண்டுகளில் இந்திய அணியின் அசுர வளர்ச்சி வேகப்பந்துவீச்சால் தான் என்பது யாராலும் மறுத்துவிட முடியாத உண்மை” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும்படிக்க: எல்பிஎல்: இலங்கை டி20 லீக் தொடரில் பங்கேற்கும் 4 இந்திய வீரர்கள் யார் தெரியுமா?