யுகேசி தொடர் மூலம் மீண்டும் கிரிக்கெட் களத்தில் இறங்கும் அதிரடி நாயகன் யுவராஜ் சிங் !

Update: 2020-12-17 02:29 GMT

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர்கள் வரிசையில் இடம்பிடித்தவர் யுவராஜ் சிங். தனது சிறப்பான பேட்டிங் மற்றும் இடது கை சுழற்பந்துவீச்சு ஆகியவற்றின் மூலம் இந்திய அணியை பல முறை வெற்றிப் பாதைக்கு யுவராஜ் சிங் அழைத்து சென்றுள்ளார். இவர் 2011ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணம் அடைந்தார். இதன்பின்னர் மீண்டும் கிரிக்கெட் விளையாடி வந்தார். எனினும் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார்.

இந்நிலையில் சமீப காலங்களில் அவர் மீண்டும் கிரிக்கெட் விளையாட விருப்பத்துடன் உள்ளதாக செய்திகள் வெளியாகின. யுவராஜ் சிங்கும் அது குறித்து பரிசீலித்து வருவதாக தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நடத்தும் 'அலிடிமேட் கிரிக்கெட் சேலஞ்ச்'(யுகேசி) என்ற தொடரில் யுவராஜ் சிங் பங்கேற்க உள்ளார். இதில் யுவராஜ் உடன் சேர்ந்து கிறிஸ் கெய்ல், மோர்கன், ரஷீத் கான், கேவின் பீட்டர்சன், ரஸல் உள்ளிட்ட வீரர்கள் விளையாட உள்ளனர்.

யுகேசி தொடரில் ஒரு போட்டியில் இரு வீரர்கள் மட்டுமே பங்கேற்பார்கள். இவர்கள் 15 பந்துகள் கொண்ட 4 இன்னிங்ஸில் விளையாடுவார்கள். நான்கு இன்னிங்ஸ் முடிந்தவுடன் அதிக ரன்களை எடுத்த வீரர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். இந்தப் போட்டிக்கு தனியாக விதிகள் உள்ளன. ஆடுகளம் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ரன்கள் வழங்கப்படுகிறது. அத்துடன் பந்துவீச்சாளரின் பின்னால் நேராக சிக்சர் அடித்தால் 6 ரன்களுடன் சேர்ந்து ஒரு பந்து கூடுதலாக வழங்கப்படும்.

இந்த புதிய கிரிக்கெட் தொடர் துபாயில் வரும் 24ஆம் தேதி தொடங்க உள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு யுவராஜ் சிங் கிரிக்கெட் களத்தில் இறங்க உள்ளதால் இத்தொடர் பெறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வரும் ஜனவரி மாதம் நடைபெற உள்ள சையத் முஸ்டாக் அலி தொடருக்கான பஞ்சாப் அணியின் உத்தேச வீரர்கள் பட்டியலிலும் யுவராஜ் சிங் இடம்பெற்றுள்ளார். எனவே சையத் முஸ்டாக் அலி தொடருக்கு முன்பாக யுகேசி தொடர் ஒரு சிறந்த பயிற்சியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: எல்பிஎல்: டி20 போட்டிகளில் வரலாற்று சாதனை படைத்த இரண்டாவது இந்தியர் இர்ஃபான் பதான் !