தனது கிராமத்திற்கு ரயில் நிலையம் வாங்கி தந்த இந்தியாவின் முதல் பளுத் தூக்குதல் சாம்பியன் ஏகாம்பரம்!

Update: 2021-01-23 03:46 GMT

பளுத் தூக்குதல் விளையாட்டில் மிகவும் பெயர் போனவர்கள் என்றால் நம் நினைவிற்கு வருபவர்கள் கர்ணம் மல்லேஸ்வரி,குஞ்சா ராணி தேவி, மிராபா சானு ஆகியோர் தான். ஆனால் இவர்களுக்கு முன்பாக பளுத் தூக்குதல் விளையாட்டில் முதல் சாம்பியன் ஆனவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது நம்மில் எத்தனை பெருக்கு தெரியும்? யார் அந்த நாயகன்? அவர் தனது கிராமத்திற்காக என்ன செய்தார்?

திருவள்ளூர் மாவட்டம் இகாட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏகாம்பரம் கருணாகரன். இவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். இதனால் இவர் சிறு வயது முதல் விளையாட்டில் பெரிதாக சாதித்து முன்னேற வேண்டும் என்று துடிப்புடன் இருந்தார். இதன்காரணமாக கபடி விளையாட்டை இவர் தேர்ந்தெடுத்தார். அந்த விளையாட்டிற்காக உடற்பயிற்சி செய்யும் போது இவருக்கு பளுத் தூக்குதல் மீது ஆர்வம் வந்துள்ளது. அப்போது மிகவும் ஒல்லியாக இருந்த இவர் தனது உடல் எடையை சற்று அதிகரித்து கொண்டு இந்தப் பயிற்சியில் களமிறங்கினார்.

ளுத்தூக்குதல் விளையாட்டில் இந்தியா சார்பில் தங்கம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையை ஏகாம்பரம் கருணாகரன் பெற்றார்

1978ஆம் ஆண்டு 52 கிலோ எடைப் பிரிவில் இவர் தேசிய போட்டியில் களம் கண்டார். களம் கண்ட முதல் தேசிய போட்டியிலேயே இவர் தங்கம் வென்று அசத்தினார். அத்துடன் அதே ஆண்டில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இவர் இந்தியா சார்பாக பங்கேற்றார். அந்தப் போட்டியிலும் இவர் சிறப்பாக செயல்பட்டு 205 கிலோ எடையை தூக்கி சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.

இதன்மூலம் பளுத்தூக்குதல் விளையாட்டில் இந்தியா சார்பில் தங்கம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையை ஏகாம்பரம் கருணாகரன் பெற்றார். இவர் இந்திய திரும்பிய போது இவரை வரவேற்காக பல ரசிகர்கள் காத்திருந்தனர். மேலும் ஏகாம்பரம் கருணாகரன் அப்போது தென்னக ரயில்வேயில் பணிப் புரிந்து வந்தார். இதனால் இவரை வரவேற்க மத்திய ரயில்வே துறை அமைச்சர் மது தண்டவதேயும் வந்திருந்தார்.

கருணாகரன் ரயிலிருந்து இறங்கியதும் அவரை பார்த்து அமைச்சர் மது தண்டவதே, “கருணாகரன் நீங்கள் இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் பெரிய போக்கிஷம். எனவே உங்களுக்கு நான் என்ன தரவேண்டும்? என்று கேளுங்கள்” எனக் கேட்டார். இதற்கு கருணாகரன்,”எங்களுடைய கிராமத்தில் ரயில் நிலையம் இல்லை. இதனால் அத்யாவசிய பொருட்களை வாங்க மக்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். மேலும் 4 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று வாங்கும் நிலை உள்ளது. எனவே எங்கள் கிராமத்திற்கு ரயில் நிலையம் வந்தால் நன்றாக இருக்கும்” எனக் கூறினார்.

கருணாகரின் கோரிக்கையை ஏற்ற அமைச்சர் இகாட்டூர் கிராமத்தில் ரயில் நிலையம் அமைக்க உத்தரவிட்டார். அதன்பின்னர் ரயில் நிலையமும் வெற்றிகரமாக கட்டி முடிக்கப் பட்டது. கருணாகரனுக்கும் ரயில்வேயில் பணி உயர்வு வழங்கப்பட்டது. 1978ஆம் ஆண்டு முதல் 1982ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் 52 கிலோ எடைப்பிரிவில் கருணாகரன் தான் தேசிய சாம்பியனாக வலம் வந்தார். தனது ஓய்விற்கு பிறகு அவர் இந்திய பளுத் தூக்குதல் அகாடமியில் பல இளம் வீரர்கள் தயார் செய்து வருகிறார். தனது கிராமத்திற்கு ஒரு விளையாட்டு வீரர் ரயில் நிலையம் வாங்கி தந்தது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த வீரர் நாம் என்றும் மறந்துவிட கூடாது.

மேலும் படிக்க: ‘குண்டாக இருக்கிறீர்கள்’ என்று சொல்லப்பட்ட பல் மருத்துவர் பவர் லிஃப்டிங்கில் சாம்பியனான எழுச்சிப் பயணம் !