ஐஎஸ்எல் கால்பந்து 2020: அனைத்து தடைகளையும் தகர்த்து அட்டகாசமாக அரையிறுதிக்குள் நுழைந்த சென்னையின் ஃஎப் சி

Update: 2020-02-22 09:25 GMT

ஐஎஸ்எல் ஆறாவது சீசனின் தொடக்கம் சென்னையின் ஃஎப் சி அணிக்கு அத்தனை சிறப்பாக இல்லை. கடந்த சீசனை போலவே தொடர் தடுமாற்றங்கள், தோல்விகள். மேனஜர் ஜான் க்ரகொரியின் எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. அனைத்திற்கும் மேலாக முதல் நான்கு ஆட்டங்களில் ஒரு கோல் கூட அடிக்கவில்லை என்பது அனைவருக்கும் மிகுந்த கவலையளித்தது. கடைசி இடத்தில் இருந்த இந்த அணி அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பில்லை என அனைவரும் கருதிய பொழுது புதிய மேனஜராக வந்தார் ஓவன் காயல்.

அதன் பிறகு நடந்த அனைத்துமே ரசிகர்களுக்கு இன்ப ஆச்சர்யங்கள் தான். ஒரு கோல் அடிக்கவே தடுமாறிய அணி தாறுமாறாக கோல்கள் அடிக்க தொடங்கினர். ஒவ்வொரு ஆட்டத்திலும் ஒன்றுக்கும் மேற்பட்ட கோல்கள் அடித்து அசத்தினர். ரஃபெல் அழகாக வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்க அதை தனக்கு சாதகமாக மாற்றி கோல் மழை பொழிந்தார் நேர்க வால்ஸ்கிஸ். சிறப்பம்சமாக அனைத்து வெற்றிகளும் அணியின் மொத்த உழைப்பினால் கிடைத்தனர். அனைத்து வீரர்களும் தங்களது முழு உழைப்பினை கொடுத்தனர். விஷால், கோயன் மற்றும் சபியா உதவியுடன் கோல்களை தடுக்க, தாபா மற்றும் நமது மண்ணின் மைந்தர் எட்வின் ஆகியோர் நடகளத்தினை பாதுகாக்க எந்தவித தடங்களும் இல்லாமல் முன்கள வீரர்கள் சுதந்திரமாக செயல்பட்டார்கள்.

தோய், ரென்தலாய், ஜெர்ரி, ச்சாங்டே போன்ற இந்திய வீரர்களின் நல்ல பெர்ஃபாமன்ஸ்கள் கூடுதல் சிறப்பு. ஆன்ட்ரே, டிராகோஸ், ஜெர்மன்ப்ரீட் ஆகியோரை பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும். கடைசியாக நடந்த 7 போட்டிகளில் 6 போட்களில் வென்று இன்னும் ஒரு போட்டி மீதிமிருந்தாலும் அரையிறுதிக்கு தகுதிபெற்று சாதனை செய்துள்ளனர். ரைவல் அணியான கேரளா பிலாஸ்டர்ஸை அவர்களுது இடத்தில் 6-3 என வென்றது தனிச்சிறப்பு. முதல் முறையாக கோப்பையை வென்ற சீசனிலும் இதேபோல் சுமாராக தொடங்கி பின்னர் தொடர்ந்து அனைத்து போட்டிகளிலும் வென்று கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த முறையும் அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே அனைத்து ரசிகர்களின் தற்போதய கனவாக இருக்கும்.

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி அடைய கூடாது என்ற கட்டாயத்தில் களமிறங்கிய வீரர்கள் ஆட்டம் முடியும் வரை முழு முனைப்புடன் ஆடினார்கள். முன்கள வீரர்களும் தடுப்பாட்டம் ஆடியது அணியின் ஒற்றுமையை மிகத்தெளிவாக காட்டியது. இந்த மனநிலை மாற்றத்தின் முக்கிய காரணம் புதிய மேனேஜர் ஓவன் காயல். அவருக்கு நிச்சயம் பெரிய பாராட்டுகளை கூறியே ஆகவேண்டும். ஆட்டத்தின் பின் வீரர்கள் வெளிப்படுத்திய கொண்டாடத்தில் இருந்தே இந்த நேரத்திற்காக எவ்வளவு உழைத்திருக்கிறார்கள் என எளிதாக கூறிவிடலாம்.

ஆனால் ஆட்டம் இன்னும் முடியவில்லை, இன்னும் ஒரு இலக்கு இருக்கிறது. ஐஎஸ்எல் கோப்பை. அதனையும் வென்று நமது ஊருக்கு பெருமையும், வெற்றி தோல்வி என அனைத்து நிகழ்வுகளிலும் உடனிருந்த ரசிகர்களுக்கு மேலும் மகிழ்ச்சியை தருவார்கள் என நம்புவோம்.