"பத்து ஆண்டுகளாக நான் ஒருவேளை மட்டும் உணவு சாப்பிட்டேன்.."- முன்னாள் கோ-கோ கேப்டன்

Update: 2020-08-25 02:44 GMT

இந்திய மகளிர் கோ-கோ அணியின் முன்னாள் கேப்டன் சரிகா காலே. இவருக்கு இந்த ஆண்டிற்கான அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் கடந்து வந்த கடினமான பாதை என்ன? அவர் தனது வறுமையை எவ்வாறு வென்றார்?

சரிகா காலே மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் தனது வாழ்க்கை குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதில், “என்னுடைய குடும்பம் மிகவும் வறுமை நிறைந்த சூழலில் இருந்தது. என் தந்தைக்கு சற்று உடல்நலம் சரியில்லாமல் இருந்தது. எனவே அவர் வேலைக்கு செல்லவில்லை. என்னுடைய அம்மா தையல் தொழில் செய்து ஒரளவு வருமானம் ஈட்டி வந்தார். எனினும் அது குடும்பத்தை நடத்த உதவவில்லை.

எனக்கு 13 வயது இருந்தப் போது கோ-கோ போட்டியின் மீது ஆர்வம் எழுந்தது. இதனால் இந்த விளையாட்டை நான் விளையாட ஆரம்பித்தேன். இந்த விளையாட்டு என்னுடைய வாழ்க்கையே மாற்றியது. தற்போது நான் ஒரு விளையாட்டு தொடர்பான அதிகாரியாக ஒஸ்மானாபாத் மாவட்டத்தில் பணியில் உள்ளேன்.

இந்திய மகளிர் கோ-கோ அணி(கோப்புப் படம்)

தற்போது எனக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் நான் கோ-கோ விளையாடிய நாட்களை நினைவு கொள்கிறேன். மேலும் பத்தாண்டுகளுக்கு வெறும் ஒருவேளை மட்டும் உணவு உன்று விளையாடியதையும் தற்போது நினைவில் கொள்கிறேன். கிராமபுறங்களில் நீங்கள் விளையாட்டில் எவ்வளவு பெரிய சாதனையை செய்திருந்தாலும் அது அவர்களுக்கு மிகவும் தாமதமாக தான் தெரியவரும். அதுவே கிராம புறங்களுக்கும் நகர்புறங்களுக்கு இடையே உள்ள விளையாட்டு தொடர்பான இடைவேளி” எனத் தெரிவித்துள்ளார்.

சரிகா காலே குறித்து அவரது பயிற்சியாளர் சந்திரஜித் யாதவ், “2016ஆம் ஆண்டு இந்திய மகளிர் ஆசிய கோ-கோ சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றது. அந்த அணியில் சரிகா காலே இடம்பெற்று இருந்தார். அத்துடன் அந்தத் தொடரின் சிறந்த வீராங்கனை என்ற பட்டத்தையும் சரிகா வென்று அசத்தினார். மேலும் சரிகா காலே பல முறை தேசிய போட்டிகளில் பதக்கங்களை வென்று சாதித்தவர். 2016ஆம் ஆண்டு அவருடைய குடும்ப சூழ்நிலையால் சரிகா கோ-கோ விளையாட்டை விட நேரிட்டார். எனினும் அப்போது அவரை நாங்கள் ஆலோசனை வழங்கி மீண்டும் விளையாட வைத்தோம். அதன்பலன் அவருக்கு தற்போது ஒரு அரசாங்க வேலை கிடைத்துள்ளது” எனக் கூறியுள்ளார்.

22 ஆண்டுகளுக்கு பிறகு கோ-கோ வீராங்கனை ஒருவருக்கு அர்ஜூனா விருது அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடைசியாக 1998ஆம் ஆண்டு சோபா நாராயணன் கோ-கோ விளையாட்டிலிருந்து அர்ஜூனா விருதை வென்றார். அவருக்கு பின் தற்போது சரிகா காலே கோ-கோ விளையாட்டிலிருந்து அர்ஜூனா விருதை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: செஸ் ஒலிம்பியாட் 2020: பிரக்ஞானந்தாவின் சிறப்பான ஆட்டத்தால் காலிறுதிக்கு முன்னேறியது இந்தியா