ஃபெட் கோப்பை டென்னிஸ் 2020: இந்தோனேசிய அணியை வீழ்த்தி உலக ப்ளே ஆஃப்ஸ் சுற்றுக்குள் நுழைந்து இந்திய அணி சாதனை

Update: 2020-03-07 22:26 GMT

துபாயில் நடந்து வரும் ஃபெட் கோப்பை போட்டிகளின் இறுதி நாளான நேற்று இந்தோனேசிய மகளிர் அணியை எதிர்கொண்டது இந்திய மகளிர் அணி. இந்த டையினை வெல்லும் அணி உலக ப்ளே ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறும் என்பதால் இரு அணி வீராங்கனைகளும் வெற்றி பெறும் முனைப்பில் இருந்தனர். இதனால் தொடக்கம் முதலே ஆட்டம் பரபரப்பாக இருந்தது. இந்தியாவிற்காக முதல் ஆட்டத்தில் களமிறங்கினார் ஃபார்மில் இருக்கும் ருதுஜா போஸ்லே. அவரை எதிர்த்து ஆடிய பிரிஸ்கா மேடிலின் நுக்ரோஹோ அதிரடியாக விளையாடி முதல் செட்டினை 6-3 என்ற கணக்கில் வென்றார். ஆனால் இரண்டாவது செட்டில் மிக அதிரடியாக விளையாடிய ருதுஜா, பிரிஸ்காவிற்கு எந்த வாய்ப்பும் தராமல் 6-0 என்ற கணக்கில் கைப்பற்றினார். வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் சுதாரித்து விளையாடிய பிரிஸ்கா ஆட்டத்தின் முடிவில் 6-3, 0-6, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றார்.

இதனால் அடுத்த ஆட்டத்தில் வென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கிய இந்தியாவின் முதல் நிலை வீராங்கனை அங்கிதா ரெய்னா இந்தோனேசியாவின் அல்டிலா சுட்டிஜாடியினை எதிர்கொண்டார். இவர் கடந்த டைகளில் ஒற்றையர் ஆட்டத்தில் தோல்வியடைந்திருந்தது குறிப்படதக்கது. ஆனால் இந்த முறை எந்த சறுக்கல்களுக்கும் இடம் கொடுக்காமல் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று டையினை சமன் செய்தார்.

 

கடந்த சில டைகளைப் போலவே வெற்றியை நிர்ணயம் செய்யும் போட்டியானது இரட்டையர் போட்டி. இதில் இந்திய வெற்றி ஜோடியான சானியா மிர்சா, அங்கிதா ரெய்னா ஆகியோர் இந்தோனேசியாவின் பிரிஸ்கா மேடிலின், அல்டிலா சுட்டிஜாடி ஜோடியினை எதிர்கொண்டது. ஆட்டத்தின் தொடக்கத்தில் பின் தங்கி இருந்தாலும் தொடர்ந்து போராடி முதல் செட்டினை 7-6 என்ற கணக்கில் வென்றனர் அங்கிதா மற்றும் சானியா ஜோடி. இரண்டாவது செட்டில் இந்தோனேசிய ஜோடியை அடித்து நொருக்கி 6-0 என்ற கணக்கில் கைப்பற்றினர் இந்திய ஜோடி. இதன்மூலம் இந்த ஆட்டத்தினை 7-6, 6-0 என வென்று, இந்த டையினை கைப்பற்றி முதல் முறையாக உலக ப்ளே ஆப்ஸ் சுற்றுக்கு தகுதிபெற்று புதிய சாதனை படைத்துள்ளனர் இந்திய மகளிர் டென்னிஸ் அணியினர்.

இந்த வெற்றிக்கு அணியிலுள்ள அனைவரும் பங்காற்றியது மிகவும் சிறப்பம்சமாகும். அங்கிதா, ருதுஜா, சானியா, சவ்ஜனியா மற்றும் ரியா என அனைவரும் தாங்கள் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் முழு மனதோடு தங்களால் முடிந்த வரை போராடியாது நிச்சயம் பாராட்டுக்குறிய விஷயமாகும். இந்த சாதனை இந்திய மகளிர் டென்னிஸ் அரங்கில் நிச்சயம் மிகப்பெரிய திருப்புமுனை ஆகும். அடுத்த மாதம் நடைபெற உள்ள ப்ளே ஆஃப்ஸ் போட்டியில் இந்திய அணி, நெதர்லாந்து அல்லது லத்வியா அணியை அவர்களுது நாட்டினில் எதிர்கொள்வார்கள்.