'விவசாயத்தாலே தான் நாங்கள் முன்னேறினோம்'- அர்ஜுனா, பத்மஸ்ரீ விருதுகளை திருப்பி தரும் வீரர்கள்

Update: 2020-12-03 02:13 GMT

இந்திய அரசு அறிவித்துள்ள புதிய வேளாண் சட்டத்திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் டெல்லியில் கிட்டத்தட்ட ஒரு வாரமாக போராடி வரும் விவசாயிகளுக்கு பல இடங்களிலிருந்தும் ஆதரவு பெருகி வரும் நிலையில் தற்போது விளையாட்டு துறையிலிருந்தும் ஆதரவு கிடைத்துள்ளது. முன்னாள் விளையாட்டு வீரர்கள் பலர் தாங்கள் வாங்கிய பத்மஸ்ரீ, அர்ஜூனா விருது உட்பட அனைத்து விருதுகளையும் திருப்பி தரப் போவதாக அறிவித்துள்ளனர்.

சஜ்ஜன் சிங் கீமா

இந்த முயற்சியை முதல் முதலில் தொடங்கிய முன்னாள் தேசிய கூடைப்பந்து வீரரும் அர்ஜூனா விருது வென்றவருமான சஜ்ஜன் சிங் கீமா தற்போது தனக்கு ஆதரவாக 30 விளையாட்டு வீரர்கள் தங்களது விருதுகளை திருப்பி தரப் போவதாக கூறியுள்ளார். இதில் 1980 மாஸ்கோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியினை சேர்ந்த குர்மயில் சிங் மற்றும் சுரிந்தர் சிங் சோதி ஆகியோரும், பத்மஸ்ரீ மற்றும் அர்ஜூனா விருது வென்ற முன்னாள் மல்யுத்த வீரரான கர்தார் சிங், பஞ்சாப்பில் தங்க மங்கை என்றழைக்கப்படும் முன்னாள் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ராஜ்பிர் கவுர், 1982 ஏசியன் கேம்ஸ் ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பல்விந்தர் சிங், 1975 ஹாக்கி உலகக்கோப்பை வென்ற ஹர்சரண் சிங் போபராய் உட்பட பல விளையாட்டு வீரர்கள் தங்களது விருதுகளை திருப்பி தர முன்வந்துள்ளனர்.

டிசம்பர் 5 அன்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களை நேரில் சந்தித்து தங்களது விருதுகளை திருப்பி கொடுக்க முடிவு செய்துள்ள இவர்கள், தாங்கள் அனைவரும் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அதன் மூலமாகவே தாங்கள் இந்த அளவுக்கு முன்னேறியுள்ளோம் எனவும் கூறினர். அதனால் தலைநகரில் போராடி வரும் அனைத்து விவசாயிகளுக்கு உறுதுணையாகவே இச்செயலை செய்யவிருப்பதாக கூறியுள்ளனர்.

மேலும் படிக்க: ‘வடசென்னையும் குத்துச்சண்டையும்’- பா.ரஞ்சித்,ஆர்யா கூட்டணியில் ‘சார்பட்டா பரம்பரை’!