அரசியல் நோக்கத்திற்காக விளையாட்டு பிரபலங்கள் பயன்படுத்தப் படுகிறார்களா?

Update: 2021-02-04 03:58 GMT

டெல்லியின் எல்லைப் பகுதியில் விவசாயிகள் பல நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் புதிதாக கொண்டு வரப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வருகின்றனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களின் ஆதரவை அளித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று பிரபல பாப் பாடகி ரிஹானா, கிரெட்டா துன்பெர்க் உள்ளிட்ட வெளிநாடு பிரபலங்கள் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக ட்வீட் செய்தனர். இதனைத் தொடர்ந்து விவசாயிகளின் போராட்டம் உலகளவில் முக்கியத்துவம் பெற்றது. இந்தச் சூழலில் மத்திய வெளியுறவுத் துறை சார்பில் ஒரு விளக்கம் அளிக்கப்பட்டது. அந்த விளக்கம் ட்விட்டரில் ‘#IndiastandTogether’ என்ற ஹேஸ்டேக் உடன் பதிவிடப்பட்டது.

இதனையடுத்து சச்சின் டெண்டுல்கர்,விராட் கோலி, ரோகித் சர்மா, சாய்னா நேவால் உள்ளிட்ட விளையாட்டு பிரபலங்களும் இந்த ஹேஸ்டேக் பயன்படுத்தி ட்வீட் செய்தனர். இவர்களுடன் சேர்ந்து பாலிவுட் நடிகர் நடிகைகள் சிலரும் ட்வீட் செய்தனர். இதில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் போட்ட ட்வீட்டும் சாய்னா நேவாலின் ட்வீட்டும் ஒரே மாதிரி இருந்தது.

அத்துடன் கிரிக்கெட் வீரர்களின் ட்வீட்களில் ‘amicable’ என்ற ஆங்கில வார்த்தை ஒரே மாதிரி அனைத்து ட்வீட்களிலும் இருந்தது. இதனால் பலரும் பெரும் குழப்பத்தில் உள்ளனர். அரசியல் நோக்கங்களுக்காக பிரபலங்கள் பயன்படுத்தப்படுகிறார்களா? என்ற சந்தேகத்தை பலர் ட்விட்டரில் எழுப்பியுள்ளனர்.

இந்த மாதிரியான ட்வீட்களை பலர் சுட்டிக்காட்டி தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். அத்துடன் அவர்கள் பல கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர். அதாவது விவசாயிகள் போராட்டத்திற்கு மல்யுத்த வீரர்கள் முதல் சில கிரிக்கெட் வீரர்கள் ஆதரவு கொடுத்துள்ள நிலையில் ஏன் முக்கிய வீரர்கள் மட்டும் ஒரே மாதிரி ட்வீட் செய்து வருகின்றனர் என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.

அதேபோல மற்ற சிலர் ஒரு போராட்டம் தொடர்பாக பதிவு இட்டது எப்படி இந்திய இறையாண்மையை சீர்குலைக்கும் என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர். இப்படி பல கேள்விகளை எழுப்பியுள்ள பிரபலங்களின் ட்வீட்கள் முக்கிய பேசுப் பொருளாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பாகவும் விளையாட்டு பிரபலங்கள் அரசிற்கு ஆதரவாக ஒரே மாதிரி ட்வீட் செய்துள்ளனர். குறிப்பாக 2019ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது சாய்னா நேவால்,பி.வி.சிந்து,மேரி கோம், பூஜா தண்டா உள்ளிட்ட விளையாட்டு வீராங்கனைகள் பிரதமர் மோடியின் ‘பாரத் லக்‌ஷ்மி’ என்ற பெண்கள் தொடர்பான திட்டத்தை வரவேற்றனர். அப்போது இவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான ட்வீட்களை செய்தனர். அந்த ட்வீட்கள் பெரும் சர்ச்சையாக மாறியிருந்தன. அப்போது பலர் அரசு சார்ந்த ஒருவர் எழுதி தந்த விஷயத்தையும் இவர்களும் அனைவரும் ட்வீட் செய்துள்ளனர் என்று கூறினர். தற்போது மீண்டும் அதே மாதிரியான செயல் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் வரும் கருத்துகள் அனைத்தும் தனிப்பட்ட கருத்தே ஆகும். இதற்கும் நிர்வாகத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.

மேலும் படிக்க: தடையிலிருக்கும் கோமதி மாரிமுத்து மீண்டும் எப்போது களமிறங்குவார்?