கேலோ இந்தியா யுனிவர்சிட்டி கேம்ஸ்: அடுத்தடுத்து இரண்டு தங்கப்பதக்கங்கள் வென்ற டூட்டி சந்த்

Update: 2020-03-01 14:48 GMT

இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் கேலோ இந்தியா யுனிவர்சிட்டி கேம்ஸ் தொடரில் பங்கேற்று வருகின்றன. இப்போட்டிகள் ஒடிசாவில் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் டூட்டி சந்த் தங்கப்பதக்கம் வென்றார்.

கலிங்கா தொழிற்கல்வி கல்லூரி சார்பாக விளையாட்டுத் தொடரில் டூட்டி சந்த் பங்கேற்றிருந்தார். 24 வயதான அவர், 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை 23.66 நொடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். மும்பை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கீர்த்தி விஜய் இரண்டாம் இடமும், உத்கல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தீபாலி மூன்றாம் இடமும் பிடித்தனர்

இதே போல, 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் முதல் இடம் பிடித்த டூட்டி, தங்கம் வென்றார். 11.49 நொடிகளில் பந்தய தூரத்தை கடந்து தேசிய யுனிவர்சிட்டி அளவில் ரெக்கார்டு படைத்துள்ளார் டூட்டி.

100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டிகளில் அடுத்தடுத்து தங்கம் வென்று அசத்தியுள்ளார் டூட்டி சந்த். “பயிற்சி செய்து கொண்டே இருந்தால் மட்டும் போதாது, இதுபோல பல தொடர்களில் விளையாடுவது உதவியாக இருக்கும்” என டூட்டி சந்த் தெரிவித்துள்ளார்.