டூட்டி சந்த், சாக்‌ஷி மாலிக், மனு பாக்கர் உள்ளிட்ட 29 பேர் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை

Update: 2020-08-19 02:56 GMT

மத்திய அரசு ஆண்டு தோறும் விளையாட்டு துறையில் சாதித்தவர்களுக்கு விருது வழங்கி வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டிற்கான விருதுகளுக்கு வீரர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அர்ஜூனா விருதுக்கு தடகள வீராங்கனை டூட்டி சந்த், மல்யுத்த வீராங்கன சாக்‌ஷி மாலிக், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனுபாக்கர் உள்ளிட்ட 29 பேர் பரிந்துரைக்கப் பட்டுள்ளனர்.

இந்தப் பட்டியலில் கிரிக்கெட்டிலிருந்து வீரர் இஷாந்த் சர்மா, வீராங்கனை தீப்தி சர்மா இடம்பெற்றுள்ளனர். மல்யுத்தத்திலிருந்து சாக்‌ஷி மாலிக், திவ்யா காக்கரன், ராகுல் அவாரே ஆகியோர் உள்ளனர். ஹாக்கியிலிருந்து ஆகாஷ் தீப் சிங் மற்றும் தீபிகா தாகூர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானுவும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

மேலும் தடகளத்திலிருந்து ஓட்டப்பந்தைய வீராங்கனை டூட்டி சந்த் பரிந்துரைக்கப் பட்டுள்ளார். குத்துசண்டை வீராங்கனை லொவ்லினா மற்றும் வீரர் மணிஷ் கௌசிக் இடம்பெற்றுள்ளனர். துப்பாக்கி சுடுதலிருந்து சவுரப் சௌதிரி மற்றும் மனு பாக்கர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

சாக்‌ஷி மாலிக்

இவர்கள் தவிர பேட்மிண்டன் வீரர்கள் சத்விக் சாய்ராஜ், சிராக் செட்டி, வில்வித்தை வீரர் அடானு தாஸ், லுஜ் விளையாட்டு வீரர் சிவ கேசவன், கால்பந்து வீரர் சந்தேஷ் ஜெகன், சரிகா காலே(கோ-கோ), அதிதி அசோக்(கோல்ஃப்), மணிஷ் நர்வால்(பாரா துப்பாக்கிசுடுதல்), தத்து போகன்கல்(படகு பந்தையம்), தீபக் ஹூடா(கபடி), திவிஜ் சரண்(டென்னிஸ்) உள்ளிட்டவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

முன்னதாக ஓய்வு பெற்ற நீதிபதி முகுந்தம் சர்மா தலைமையிலான குழு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கான பரிந்துரையை அளித்திருந்தது. அதில் ரோகித் சர்மா, மாரியப்பன், ராணி ராம்பால் உள்ளிட்ட ஐந்து பேர் இடம்பெற்றுள்ளனர். அர்ஜூனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள சாக்‌ஷி மாலிக் மற்றும் மீராபாய் சானு ஏற்கெனவே ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மனு பாக்கர்

மேலும் துரோணாச்சார்யா விருதுக்கு ஹாக்கி பயிற்சியாளர் ஜூட் ஃபிளிக்ஸ், துப்பாக்கி சுடுதல் பயிற்சியாளர் ஜஸ்பால் ரானா உள்ளிட்ட 5 பேர் பரிந்துரைக்கப் பட்டுள்ளனர். இந்தப் பட்டியல்களிலிருந்து இறுதி முடிவை விளையாட்டு அமைச்சகம் எடுக்கும். அதன்பின்னர் வரும் 29ஆம் தேதி விருது வென்றவர்களின் பட்டியலை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவிப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க: தேசிய பயிற்சி முகாமில் இருக்கும் சைக்கிளிங் வீராங்கனைக்கு கொரோனா உறுதி