“பயிற்சிக்காக பிஎம்டபிள்யூ காரை விற்கவில்லை”-  டூட்டி சந்த் விளக்கம் 

Update: 2020-07-21 05:23 GMT

தடகளத்தில் பி.டி.உஷா, அஞ்சு பாபி ஜார்ஜ் போன்ற வீராங்கனைகளுக்கு பிறகு தற்போது உலக அளவில் மீண்டும் இரண்டு இந்திய வீராங்கனைகள் எழுச்சிப் பெற்றுள்ளனர். அவர்களில் ஒருவர்தான் 100 மீட்டர் ஓட்டப் பந்தைய வீராங்கனை டூட்டி சந்த். இவர் ஓடிசா மாநிலத்தை சேர்ந்தவர். 100 மீட்டர் ஓட்டப்பந்தைய தூரத்தை 11.22 விநாடிகளில் கடந்த அதிவேக இந்திய வீராங்கனை டூட்டி சந்த்.

இவர் சமீபத்தில் தனது சமூகவலைத்தளத்தில் தனக்கு பரிசாக வந்த பிஎம்டபிள்யூ காரை விற்கபோவதாக தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இவர் தனது பயிற்சிக்காக சொகுசு காரை விற்கிறார் என்று பல விமர்சனங்கள் எழ தொடங்கின.

இந்த விமர்சனங்களுக்கு பதிலாக டூட்டி சந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு விளக்கத்தை அளித்தார். அதில், “என்னிடம் இருக்கும் பிஎம்டபிள்யூ காரை பராமாரிக்க முடியாததால் தான் நான் அதனை விற்க நினைக்கிறேன். என்னுடைய பயிற்சி நிதி தேவைக்காக இந்த காரை விற்கவில்லை. எனது பயிற்சிக்காக காரை விற்க போகிறேன் என்பது தவறான செய்தி. மேலும் என்னுடைய பயிற்சிக்கு எப்போதும் என்னுடைய கே.ஐ.ஐ.டி பல்கலைக்கழகம் மற்றும் ஒடிசா அரசு உரிய உதவிகளை செய்து வருகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஒடிசா அரசின் விளையாட்டு துறை சார்பில் இதுவரை டூட்டி சந்த் பயிற்சிக்காக ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பான விவரத்தை அந்த அரசு வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் தற்போது வரை டூட்டி சந்த் பயிற்சிக்காக 4.09 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா அரசின் இந்த பயிற்சி நிதி அறிக்கை தொடர்பாக டூட்டி சந்த் பிடிஐ நிறுவனத்திற்கு கருத்து தெரிவித்துள்ளார். அதில், “இதுவரை ஒடிசா அரசு எனது பயிற்சிக்காக செய்து வரும் உதவிகளுக்கு நான் எப்போதும் கடமை பட்டிருக்கிறேன். ஆனால் இந்த 4 கோடி நிதி உதவி என்பது சரியானதல்ல. ஏனென்றால் அந்த அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ள 3 கோடி ரூபாய் நான் இரண்டு பதக்கங்களை வென்றதற்காக கொடுக்கப்பட்ட பரிசு தொகை. அது எவ்வாறு எனது பயிற்சிக்காக கொடுக்கப்பட்டதாக அமையும்” என கேள்வி எழுப்பியுள்ளார்.

சமீபத்தில் இத்தாலியில் நடைபெற்ற 30ஆவது கோடைக்கால பல்கலைக்கழக விளையாட்டு போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தையத்தில் டூட்டி சந்த் தங்கம் வென்று அசத்தினார். இவர் அந்தப் பந்தைய தூரத்தை 11.32 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றார். இந்த பல்கலைக்கழக தொடரில் தங்கப்பதக்கம் வெல்லும் முதல் இந்திய வீராங்கனை டூட்டி சந்த் என்பது குறிப்பிடத்தக்கது.