கேரளாவில் பிறந்தநாள் கொண்டாடிய டியாகோ மரடோனா!

Update: 2020-11-26 06:26 GMT

கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனா நம்முடன் தற்போது இல்லை என்ற செய்தியை இப்போதும் உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருப்பினும் அனைவரும் அவருக்கான மரியாதையை செலுத்தி வருகின்றனர், குறிப்பாக அவரை தங்களில் ஒருவராக கருதும் இத்தாலியின் நேபிள்ஸ் நகர மக்கள்.

அதேபோல் இந்தியாவிலும் ஒரு மாநிலத்தில் மரடோனாவினை போற்றி கொண்டாடுவார்கள். கால்பந்து விளையாட்டினை உயிராக நினைக்கும் கேரள மக்கள் தான். மற்றொரு நட்சத்திரமான பீலேவிற்கு இணையாக இவருக்கும் அங்கு ரசிகர்கள் உண்டு. உலகக்கோப்பை போட்டிகள் போது அங்கு திருவிழா போலத் தான் இருக்கும். மரடோனா பட்டம் வென்ற போது இவர்களும் கொண்டாடினார்கள். அப்பேற்பட்ட மரடோனா 2012 ஆண்டு தங்களது இடத்திற்கு வந்தபோது இவர்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார்கள். தனது 52ஆவது பிறந்த நாளை கேக் வெட்டி, ஆடிப் பாடி அரங்கில் கூடியிருந்த அனைத்து ரசிகர்களுடன் ஆரவாரமாக கொண்டாடினார் மரடோனா. பாபி என்ற தொழிலதிபர் மூலம் சாத்தியமான இந்த பயணத்தின் மூலம் இந்திய கால்பந்து நட்சத்திரங்கள் ஆன விஜயன், ஜோ பால் ஆகியோர் இவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

[embed]https://twitter.com/SnehaMKoshy/status/1331648494608601091[/embed]

அதுமட்டுமல்லாமல் கண்னூரில் இவர் தங்கியிருந்த ப்ளூ நைல் ஹோட்டலின் ரூம் நம்பர் 309 ஒரு சுற்றுலா தளமாகவே மாறிப்போனது. இன்றளவும் இந்த அறையினை காணவும் அங்கு தங்கவும் கேரளா முதல் மேற்கு ஆசியா வரை ரசிகர்கள் வந்தவண்ணம் உள்ளனர். மேலும் மரடோனா அங்கு தங்கியிருந்த போது உபயோகித்த அனைத்து பொருட்களும் இன்றளவும் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருவதாக அந்த ஹோட்டல் நிர்வாகி தி டெலிகிராப் பத்திரிகைக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளார். இன்று நடக்கும் ஐஎஸ்எல் போட்டியில் வெற்றி பெற்று தங்கள் மாநிலத்தின் ஆதர்ச நாயகனுக்கு அதை சமர்ப்பிக்கும் முனைப்புடன் களமிறங்குவார்கள் கேரளா பிலாஸ்டர்ஸ் அணியினர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.