டேவிஸ் கோப்பை குவாலிஃபையர்ஸ் 2020: குரோஷிய அணியிடம் தோல்வியை தழுவிய இந்திய அணி

Update: 2020-03-08 08:45 GMT

குரோஷியாவில் நடந்த டேவிஸ் கோப்பை குவாலிஃபையர்ஸ் ஆட்டத்தில் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் குரோஷியாவினை எதிர்கொண்டது இந்தியா. இந்த அணியில் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன், ராம்குமார் ராமநாதன், சுமித் நகால், லியான்டர் பயஸ், ரோகன் போபன்னா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். திவிஜ் சரண் ரிசர்வ் வீரராக உள்ளார். முதல் நாள் நடந்த இரண்டு ஒற்றையர் ஆட்டங்களில் பிரஜ்னேஷ் மற்றும் ராம்குமார் ஆகியோர் தோல்வியடைந்திருந்ததால் இன்று நடக்கும் 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு.

முதலில் நடந்த இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவிற்காக ரோகன் போபன்னா உடன் களமிறங்கினார் டென்னிஸ் ஜாம்பவானான லியான்டர் பயஸ். டேவிஸ் கோப்பை வரலாற்றில் இதுவரை அதிக வெற்றிகளைப்(44) பெற்றிருப்பது இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. சிறப்பாக விளையாடி முதல் செட்டினை 6-3 என்ற கணக்கில் வென்றனர் அனுபவம் வாய்ந்த இந்திய ஜோடி. இரண்டாவது செட்டில் குரோஷிய ஜோடி பதிலடி கொடுக்க டை பிரக்கர் வரை சென்றது. முடிவில் 7(11)-6(9) என்ற கணக்கில் கைப்பற்றியது குரோஷியா. மூன்றாவது செட்டிலும் இரு அணிகளும் கடுமையாக போராட பரபரப்பாக தங்களது அனுபவத்தினை பயன்படுத்தி 7-5 என்ற கணக்கில் கைப்பற்றினார் லியான்டர், போபன்னா ஜோடி. இதன் மூலம் டேவிஸ் கோப்பையில் தனது 45ஆவது வெற்றியினை பதிவு செய்து புதிய சாதனையை படைத்தார் லியான்டர் பயஸ்.

அடுத்து நடந்த ஒற்றையர் ஆட்டத்தில் சிறிய மாற்றமாக பிரஜ்னேஷிற்கு பதிலாக களமிறங்கினார் சுமித் நகால். மரின் சிலிச்சிற்கு எதிராக விளையாடிய அவரால் பெரிதாக சோபிக்க முடியவில்லை. ஆட்டத்தின் முடிவில் 6-0, 6-1 என்ற கணக்கில் வெற்றிபெற்றார் சிலிச். இதன் மூலம் இந்த குவாலிஃபையரில் வென்று உலக சுற்றுக்கு முன்னேறியது குரோஷிய அணி.