கட்டட தொழிலாளியின் மகள் யு-20 நடைப் போட்டியில் சாதனையை முறியடித்து அசத்தல்!

Update: 2021-02-12 05:28 GMT

20-வது வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய தடகள போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.இதில் 10 கிலோ மீட்டர் நடை போட்டியில் கட்டட தொழில் செய்பவரின் மகள் ஒருவர் சாதனைப் படைத்துள்ளார். யார் அவர்? அவர் கடந்த வந்த பாதை என்ன?

உத்தரப் பிரதேசத்திலுள்ள வாரணாசி பகுதியைச் சேர்ந்தவர் முனிதா பிரஜாபதி. இவர் தந்தை மும்பையில் கட்டுமான தொழில் செய்து வருகிறார். ‘’ஸ்போட்ஸ் கோட்டாவின் மூலம் அரசுப்பணி கிடைத்தால் வீட்டின் வறுமை போகும்’’ என்று இவரின் அக்கா கூறியுள்ளார். இதனால் முனிதாவின் கவனம் விளையாட்டின் பக்கம் திரும்பியது. ராணுவ வீரரான நிர்பையிடம் இவர் பயிற்சி மேற்கொண்டார். இவரின் பயிற்சியை கண்ட கிராம மக்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் அதையெல்லாம் ஒரு போதும் முனிதாவின் பெற்றோர்கள் கண்டு கவலைப்படவில்லை. ‘’முனிதாவின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அவள் நிச்சயம் வெற்றி பெறுவாள்’’ என்று பயிற்சியாளர் நிர்பைக் கூறினார்.

20-வது வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய தடகள போட்டியில் 10 கிலோ மீட்டர் நடைப்போட்டியில் முனிதா பங்கேற்றுள்ளார்.இதில் சிறப்பாக நடந்த முனிதா வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் ரேஷ்மா பட்டேலின் 48:25.90 சாதனையை, முனிதா 47:53.58 என்ற நேரத்தில் நடந்து புதிய சாதனையை படைத்தார்.

இதன்மூலம் 10 கிலோமீட்டர் பந்தயத்தை 48 நிமிடங்களுக்குள் கடந்து வந்த முதல் வீராங்கனை என்ற சாதனையையும் படைத்துள்ளார். இந்த வெற்றியை தொடர்ந்து நைரோபியில் நடக்க இருக்கும் உலகளவிலான ஜுனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.தனது பயிற்சியாளரின் வாக்கை உண்மையாக்கும்படி செய்த முனிதா ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்ந்துள்ளார். வறுமையை எதிர்க்க தனது விளையாட்டு மூலம் அவர் போட்ட கணக்கு தற்போது நிஜமாக தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: ‘தேசிய கொடி சரியாக இல்லாததால் விளையாட மறுத்த சானியா மிர்சா’- ரீவைண்ட்