‘நான் கேகேஆர் அணிக்கு தேர்வாகியதை கேட்டவுடன் அழுதேன்’- ஐபிஎல் தொடரின் முதல் அமெரிக்க வீரர்

Update: 2020-09-23 06:56 GMT

ஐபிஎல் 2020 தொடர் யுஏஇயில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் பங்கேற்பது என்பது பல இந்திய உள்ளூர் வீரர்களுக்கு ஒரு பெரிய கனவாக இருக்கும். அதேபோல பல்வேறு வெளிநாடுகளிலுள்ள வீரர்களுக்கும் ஐபிஎல் தொடர் ஒரு பெரிய வாய்ப்பாக பார்க்கப்படும். அந்தவகையில் ஐபிஎல் தொடரில் முதல் முறையாக ஒரு அமெரிக்க வீரர் இடம்பெற்றுள்ளார். யார் அவர்? எந்த அணியில் இடம்பெற்றுள்ளார்?

அமெரிக்க கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள வேகப்பந்து வீச்சாளர் அலி கான். இவர் பாகிஸ்தான் நாட்டில் பிறந்தவர். எனினும் இவரது சிறிய வயதில் தனது குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு இவர் குடிபெயர்ந்துள்ளார். இதனால் அங்கு உள்ள உள்ளூர் போட்டிகளில் இவர் களமிறங்க ஆரம்பித்துள்ளார்.

2018ஆம் ஆண்டு அலி கானிற்கு ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. ஏனென்றால் அந்த ஆண்டு நடைபெற்ற யுஎஸ் ஆல் ஸ்டார்ஸ் டி20 தொடரில் இவர் பங்கேற்றுள்ளார். அதில் வெஸ்ட் இண்டிஸ் அணியின் ஆல் ரவுண்டர் டிவைன் பிராவோவும் விளையாடியுள்ளார். அப்போது இவரது சிறப்பான யார்க்கர் பந்துவீச்சை பார்த்த பிராவோ அலி கானை கரிபியன் பிரிமியர் லீக் தொடரில் விளையாடும் வாய்ப்பை பெற்று தந்துள்ளார்.

அந்த சிபிஎல் தொடரில் அலி கான் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி 16 விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார். இந்தாண்டு நடைபெற்ற சிபிஎல் தொடரிலும் அவர் சிறப்பாக பந்துவீசியுள்ளார். அதன்விளைவாக இவருக்கு முதல் முறையாக ஐபிஎல் தொடரில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதுதொடர்பாக கிரிக்இன்ஃபோ தளத்திற்கு அலி கான் அளித்த பேட்டியில், “இந்தாண்டு சிபிஎல் தொடரின் அரையிறுதிக்கு முன்னாள் அணியின் கூட்டம் நடைபெற்றது. அப்போது மெக்கலம் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஒரு அமெரிக்கர் விளையாட உள்ளார் எனக் கூறினார். அதைக் கேட்டவுடன் நான் அழுதேன். ஏனென்றால் ஐபிஎல் மாதிரியான பெரிய தொடரில் விளையாட வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை” எனத் தெரிவித்துள்ளார்.

அலி கான் இந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். இவர் இங்கிலாந்து ஹரி கார்னிக்கு மாற்று வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இன்று தனது முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து விளையாட உள்ளது.

மேலும் படிக்க: உலகளவில் சாதனை படைத்துள்ள ஐபிஎல் 2020 முதல் போட்டி