சர்க்கிள் கபடி: இந்திய வீரர்கள் அணியை வீழ்த்தி பாகிஸ்தான் உலக சாம்பியன்

Update: 2020-02-17 09:50 GMT

7-வது சர்க்கிள் ஸ்டைல் உலகக் கோப்பை கபடி சாம்பியன்ஷிப் போட்டி பாகிஸ்தானில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான், கனடா, ஆஸ்திரேலியா, ஈரான், அமெரிக்கா உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன. இப்போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் வாகா எல்லைப் பகுதி வழியாக பாகிஸ்தான் சென்றனர்.

அவர்கள் மத்திய அரசிடமிருந்து அனுமதி பெறாமல் சென்றதால் பெரும் சர்ச்சை எழுந்தது. ஏனென்றால் இந்தியா சார்பில் அணிகள் வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளுக்கு சென்றால் மத்திய அரசிடம் ஒப்புதல் பெற வேண்டும். ஆனால் இந்த போட்டிக்கு இந்திய கபடி அணி எந்தவித அனுமதியும் பெறாமல் சென்றுள்ளதாக மத்திய விளையாட்டு அமைச்சகம் தெரிவித்தது.

இந்நிலையில் இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவிலிருந்து சென்ற வீரர்கள் கொண்ட அணியும் பாகிஸ்தான் அணியும் விளையாடினார். இந்தப் போட்டி மிகுந்த எதிர்பார்ப்புக்கு கிடையில் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் ஆணி 43-41 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றது. அத்துடன் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது.

இந்தப் பிரிவில் உலகக் கோப்பை தொடர் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் தொடங்கியது. இதுவரை நடைபெற்றுள்ள 6 உலகக் கோப்பையையும் இந்திய அணி வென்றுள்ளது. இந்த முறை இந்தியா சார்பில் சென்ற அணி உரிய அனுமதி பெறாமல் சென்றதால் அது இந்திய அணியாக கருத முடியுமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

2008ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையேயான விளையாட்டு போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் நடைபெறுவதில்லை. கடந்த ஆண்டு நடைபெற இருந்த இந்தியா-பாகிஸ்தான் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிகள் பாகிஸ்தானிலிருந்து மாற்றி கஜகிஸ்தானில் நடத்தப்பட்டது.

இந்தச் சூழலில் இந்தச் சர்க்கிள் கபடி உலகக் கோப்பைக்கு இந்திய வீரர்கள் கொண்ட அணி அனுமதி பெறாமல் பாகிஸ்தான் சென்று இந்திய கோடியுடன் பங்கேற்றது பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ, "பாகிஸ்தான் சென்று சர்க்கிள் கபடி உலகக் கோப்பையில் விளையாட எந்த ஒரு வீரருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. ஆகவே அவர்கள் அங்குச் சென்று இந்திய கோடியுடன் இந்திய என்ற பெயரில் போட்டியில் பங்கேற்றது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும்" எனக் கூறினார்.