செஸ் ஒலிம்பியாட் 2020: அரையிறுதிக்கு முன்னேறி இந்தியா அசத்தல்!

Update: 2020-08-29 02:40 GMT
செஸ் ஒலிம்பியாட் 2020: அரையிறுதிக்கு முன்னேறி இந்தியா அசத்தல்!
  • whatsapp icon

இணையதள செஸ் ஒலிம்பியாட் 2020 போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. நேற்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் இந்திய அணி ஆர்மீனியா அணியை எதிர்கொண்டது.

இந்தக் காலிறுதிப் போட்டி இரண்டு சுற்றாக நடைப்பெற்றது. முதல் சுற்றில் இந்திய அணி 3.5-2.5 என்ற கணக்கில் ஆர்மீனியா அணியை வீழ்த்தியது. முதல் சுற்றில் விஸ்வநாதன் ஆனந்த் ஆர்மீனியாவின் லெவன் அர்னோனியனுடன் டிரா செய்தார். இதனைத் தொடர்ந்து விதித் குஜராத்தி, டி. ஹரிகா தங்களது போட்டியில் வெற்றிப் பெற்றனர்.

இந்தச் சுற்றில் இந்திய வீரர் நிஹால் சரின் விளையாடிய போட்டி சர்ச்சையானது. ஏனென்றால் இந்தப் போட்டியில் அவரை எதிர்த்து விளையாடிய ஆர்மீனியா வீரர் ஹைக் மார்டிரோசியன் போட்டியின் போது இணையதள தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்திய வீரர் நிஹால் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த முடிவை எதிர்த்து ஆர்மீனியா கேப்டன் லெவன் அர்னோனியன் முறையிட்டார். இதில், அவர்களது இணையதள சேவையில் எந்தவித குறைபாடும் இல்லை எனத் தெரிவித்திருந்தார். சர்வதேச செஸ் வலைத்தளத்தை தான் தங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை எனவுன் கூறியிருந்தார். எனினும் இதை ஏற்க மறுத்த சர்வதேச செஸ் அமைப்பு இந்தியா வெற்றிப் பெற்றதாக அறிவித்தது.

சர்வதேச அமைப்பின் இந்த முடிவை ஏற்க முடியாமல் இரண்டாவது சுற்றிலிருந்து ஆர்மீனியா அணி விலகியது. இதனால் இந்திய அணி காலிறுதிச் சுற்றில் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இன்று மதியம் நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி போலாந்து அணியை எதிர்த்து விளையாட உள்ளது. அதேபோல மற்றோரு அரையிறுதிப் போட்டியில் அமெரிக்க அணி பலம் வாய்ந்த ரஷ்ய அணியை எதிர்த்து விளையாட உள்ளது.

முன்னதாக கடந்த வாரம் நடைபெற்ற முதல் சுற்றில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில் இந்திய அணி இந்தோனேஷியா, ஈரான் மங்கோலியா, சீனா, ஜெர்மனி போன்ற பலம் வாய்ந்த அணிகளை எதிர்கொண்டது. இந்தச் சுற்றில் அசத்தலாக விளையாடிய இந்திய அணி 17 புள்ளிகளுடன் முதல் இடம்பிடித்து காலிறுதி சுற்றுக்கு தகுதிப் பெற்றது. இன்று நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் போலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: ‘நியூஸ் பேப்பர் போடுவது முதல் கேல் ரத்னா வரை’- மாரியப்பனின் சாதனைப் பயணம்