“ஒலிம்பியாட் வெற்றிக்கு பிறகாவது செஸ் வீரர் வீராங்கனைகளுக்கு விருது…”- விஸ்வநாத் ஆனந்த்

Update: 2020-09-01 03:54 GMT

இணையதள செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்தியா-ரஷ்யா அணிகள் கூட்டாக சாம்பியன் பட்டத்தை வென்றனர். இதற்காக இந்திய செஸ் அணிக்கு பல தலைவர்கள், ரசிகர்கள் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் மூத்த வீரரும் முன்னாள் உலக சாம்பியனுமான விஸ்வநாதன் ஆனந்த் பிடிஐ நிறுவனத்திடம் பேட்டியளித்துள்ளார். அதில் செஸ் ஒலிம்பியாட் தொடர்பாகவும் செஸ் விளையாட்டு தொடர்பாகவும் பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர், “இந்த செஸ் ஒலிம்பியாட் வெற்றி மீண்டும் செஸ் வீரர் வீராங்கனைகளுக்கு விருதுகளை கிடைக்க உதவும். குறிப்பாக அர்ஜூனா விருதும் துரோணாச்சார்யா விருதும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். மத்திய விளையாட்டு அமைச்சகம் இனியாவது இதை பரிசிலிக்கும் என்று எதிர்பார்க்கிறேன். பல முறை நீங்கள் விருதிற்கு தகுதியானவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டி இருக்கிறது. அந்தவகையில் இந்த வெற்றி அதனை நிரூபித்திருக்கிறது. எனவே விரைவில் செஸ் விளையாட்டிற்கு விருதுகள் கிடைக்கும் என நம்புகிறேன்.

இந்த இணையதள தொடர் என்பது ஒரு சிறந்த தொடக்கம். ஏனென்றால் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் அடுத்தாண்டிற்கு மாற்றப்படும் என்று நாங்கள் நினைத்தோம். எனினும் சர்வதேச செஸ் சங்கம் இதனை இணையதளத்தில் நடத்தி அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

இறுதிப் போட்டியை பொருத்தவரை எங்கள் பக்கத்தில் எந்தவித தொழில்நுட்ப பிரச்னை இல்லை என்பதையே நாங்கள் நிரூபித்தோம். இதனை ஏற்று அந்த இரு போட்டிகளும் மீண்டும் நடைபெறும் என்று நான் நினைத்தேன். ஆனால் சர்வதேச செஸ் சங்கம் இதற்கு மாறாக இரு அணிகளும் வெற்றிப் பெற்றதாக அறிவித்தது. இந்த முடிவும் வரவேற்க தக்கது தான்.

இந்தியாவில் செஸ் விளையாட்டில் பல வீரர் வீராங்கனைகள் வந்துள்ளது நல்ல முன்னேற்றமே. குறிப்பாக சீனியர் அளவில் மட்டுமில்லாமல் ஜூனியர் பிரிவிலும் இந்திய வீரர் வீராங்கனைகள் அசத்தி வருகின்றனர் ” எனத் தெரிவித்துள்ளார்.

கடைசியாக 2013ஆம் ஆண்டு செஸ் வீரர் அபிஜித் குப்தாவிற்கு அர்ஜூனா விருது அளிக்கப்பட்டது. அதேபோல இதுவரை இரண்டு முறை மட்டுமே செஸ் பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா விருது வழங்கப்பட்டுள்ளது. 1986ல் ரகுநந்தனுக்கும், 2006ல் கோனேரு அசோகிற்கும் வழங்கப்பட்டுள்ளது.

விஸ்வநாதன் ஆனந்திற்கு அர்ஜூனா விருதும்(1985), ராஜீவ் காந்தி கேல் ரத்னா (1991-92)விருதும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: ‘வேலையில்லா பட்டதாரி முதல் விளையாட்டு விருது வரை’- இளைஞரின் சாதனைப் பயணம்!