செஸ் ஒலிம்பியாட்: முதல் முறையாக தங்கப் பதக்கம் வென்று இந்தியா அசத்தல்!

Update: 2020-08-31 02:24 GMT

இணையதள செஸ் ஒலிம்பியாட் தொடரின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா-ரஷ்யா அணிகள் மோதின. இந்தப் போட்டி தொழில்நுட்ப காரணங்களுக்காக இரண்டாவது சுற்றில் நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தியா-ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். இதன்மூலம் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்தியா தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது.

நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் முதல் சுற்று 3-3 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. இதில் அனைத்து போட்டிகளும் டிராவில் முடிந்தன. விஸ்வநாதன் ஆனந்த் முதல் சுற்று போட்டியில் விளையாடவில்லை.

இதனைத் தொடர்ந்து இரண்டாவது சுற்று போட்டிகள் நடைபெற்றன. இதில் கோனேரு ஹம்பியின் போட்டியின் போது தொழில்நுட்ப பிரச்னை ஏற்பட்டது. எனினும் அவர் போட்டியை டிராவில் முடித்தார். இதனையடுத்து நிஹால் சரன் மற்றும் திவ்யா தேஷ்முக் போட்டியில் மீண்டும் தொழில்நுட்ப பிரச்னை ஏற்பட்டது.

இதனால் இவர்கள் இருவரும் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டனர். இந்த முடிவை எதிர்த்து இந்திய அணி சார்பில் முறையிடப்பட்டது. இந்தியாவின் முறையீட்டை ஏற்ற சர்வதேச செஸ் அமைப்பு இரு அணியும் போட்டியை வென்றதாக அறிவித்தது.

இந்த வெற்றி தொடர்பாக இந்திய வீரர்கள் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அதில் விஸ்வநாதன் ஆனந்த், “நாங்கள் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளோம். ரஷ்யாவிற்கும் எனது பாராட்டுகள்” எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல மற்றொரு இந்திய வீரரான பிரக்ஞானந்தா தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்த வெற்றிக்கு ஊக்கமளித்த அனைவருக்கும் எனது நன்றி. மேலும் என்னுடைய பயிற்சியாளர் ரமேஷ் சாருக்கு நன்றி. அத்துடன் எப்போதும் எனக்கு உதவி பக்கபலமாக உள்ள கார்த்திக் மற்றும் அரவிந்த் சிதம்பரம் அண்ணாக்களுக்கும் எனது நன்றி” எனப் பதிவிட்டுள்ளார்.

இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றதற்கு பிரதமர் மோடியும் தனது வாழ்த்துகளை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “இணையதள செஸ் ஒலிம்பியாட் போட்டியை வென்ற இந்திய வீரர்களுக்கு எனது பாராட்டுகள். அவர்களின் கடின உழைப்பும் அர்பனிப்பும் வியக்கத்தக்கவை. அவர்களின் வெற்றி பிற செஸ் வீரர்களை ஊக்கவிக்கும். ரஷ்ய வீரர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்” எனப் பதிவிட்டுள்ளார்.

இணையதள செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஏற்கெனவே தொழில்நுட்ப பிரச்னைகள் எழுந்துள்ளன. இந்தியாவின் கோனேரு ஹம்பி மற்றும் விதித் குஜராத்தி மின்சார தடை காரணம் போட்டியில் தோல்வி அடைந்தனர். அதேபோல காலிறுதி சுற்றில் ஆர்மீனியா அணியும் இணையதள பிரச்னை காரணமாக ஒரு போட்டியில் தோல்வி அடைந்தது. இதற்காக இரண்டாவது சுற்றில் விளையாடாமல் ஆர்மீனியா அணி விலகியது. இவ்வாறு பல சர்ச்சைகள் நிறைந்த தொடர் தொழில்நுட்ப பிரச்னையில் முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: 'நியூஸ் பேப்பர் போடுவது முதல் கேல் ரத்னா வரை’- மாரியப்பனின் சாதனைப் பயணம்