சமனில் முடிந்த சென்னை சிட்டி எப் சி அணியின் முதல் ஏஎப்சி கோப்பை ஆட்டம்

Update: 2020-03-12 04:15 GMT

சென்னை சிட்டி எப் சி தங்களது முதல் ஏசியன் ஃபுட்பால் கான்ஃபெடரேஷன் கோப்பை ஆட்டத்தினை, சென்னையிலுள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நேற்று விளையாடியது. சென்னையில் முதன்முறையாக நடந்த ஏஎப்சி கோப்பை போட்டியும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. மாலத்தீவினை சேர்ந்த மஷியா எஸ் ஆர்சி அணியினை எதிர்கொண்டது சென்னை சிட்டி அணி. ஆட்டத்தின் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர் சென்னை அணியினர். தொடர்ந்து கோல் அடிக்கும் முனைப்பில் இருந்த அவர்களின் முயற்சிக்கு பலனாக ஆட்டத்தின் 11ஆவது நிமிடத்தில் சென்னை சிட்டி அணியின் ஸ்டைரக்கர் ஃபிட்டோ மிரான்டா அணியின் முதல் கோல் அடித்தார்.

[embed]https://twitter.com/ChennaiCityFC/status/1237785098495254528[/embed]

அதன் பின்னரும் தொடர்ந்து கோல் அடிக்க முயற்சி செய்த சென்னை சிட்டி அணியால் முதல் பகுதியின் முடிவு வரை கோல் அடிக்க முடியவில்லை. இரண்டாவது பகுதியின் துவக்கம் முதலே ஆக்ரோஷமாக விளையாடினர் மஷியா அணியினர். அதற்கு பலனாக 64 மற்றும் 67ஆவது நிமிடங்களில் இரண்டு கோல்களை அடித்து அதிர்ச்சி அளித்தனர். இதிலிருந்து சுதாரித்து பதில் கோல் திருப்ப முனைந்தனர் சென்னை அணியின் வீரர்கள். பரபரப்பாக சென்ற ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் மற்றொரு கோல் அடித்து சமன் செய்தார் ஃபிட்டோ. இதனால் ஆட்டத்தின் முடிவில் இரண்டு அணிகளும் 2-2 என்ற கோல் அடித்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது. சென்னை சிட்டி எப் சி தங்களது அடுத்த ஆட்டத்தில் மாலத்தீவினை சேர்ந்த டி சி ஸ்போர்ட்ஸ் க்ளப் அணியினை ஏப்ரல் 15 அன்று அவர்களது இடத்தில் எதிர்கொள்கிறது.